21/09/2021 (210)
சிரிப்பு பற்றிய குறிப்புகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன்றைக்கு எப்போது சிரித்தே ஆக வேண்டும் என்று நம் பேராசான் கூறுவதைப் பார்க்கலாம். இந்தக் குறளும் பலரும் அறிந்த குறள்தான்.
இரண்டும் கலந்துததான் இந்த உலகம். எந்த இரண்டு? இன்பமும் துன்பமும்தான். அதனால் இதை மிஸ்ரப் பிரபஞ்சம் என்று அழைக்கிறார்கள்.
கி.மு. முன்னூறுகளில் (வள்ளுவப் பெருந்தகை காலமும் கிட்டத்தட்ட அதே காலம் என்கிறார்கள்) கிரேக்கத்தில் ஸ்டோயிசம் (stoicism) என்ற கொள்கை தோன்றியது. இது என்னவென்றால் ‘இன்பதுன்ப நடு நிலைக் கோட்பாடு’. இன்பத்தைக் கண்டு மயங்காமலும் துன்பத்தைக் கண்டு துவளாமலும் இருப்பது. இதைத்தான் ‘Stoic silence’ என்கிறார்கள்.
இன்பமும் துன்பமும் மூன்று வழிகளில் வரலாமாம். நம் செயலால், பிறர் செயலால், மேலும் ‘யார் மூலம்’ என்று தெரியாமலும் (இதைத்தான் கடவுள் செயல் என்கிறோம்). இது நிற்க.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு நம் பேராசான் சொல்லியிருக்கிறார்.
கவிஞர் கண்ணதாசன் கேட்கிறார்: பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு? நடக்கும் காரியமா?
ஆனால், நம் வள்ளுவப்பெருந்தகை மிகவும் சுட்டி. சிரிங்க என்று சொன்னதோடு அவர் நிறுத்தவில்லை. அடுத்த வரியிலேதான் அவரின் ‘வெடி’யை வைத்திருக்கிறார்.
அது என்ன? துன்பத்திற்குப் பிறகு இன்பம் வரும். அந்த இன்பத்திற்கு ஈடு இணை கிடையாது. ஆகையால் சிரிங்க ப்ளிஸ் என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்றால் ‘நம்பிக்கை’ எனும் விளக்கை நாளும் ஏந்துங்கள்! எல்லாம் நல்லதே என்று வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை பயன்படுத்தும் சொல் ‘இடுக்கண்’. இதன் பொருள் இரண்டு. ஒன்று துன்பம். மற்றொன்று இடையூறு. துன்பமே ஒரு இடையூறுதான் என்றும் சொல்லத்தோன்றுகிறது. இடையூறுகளால் துவளாதீர்கள், அழியாதீர்கள் என்பதற்காக ‘இடுக்கண் அழியாமை’ என்ற 63வது அதிகாரம். இது ஆள்வினை உடைமை (62) க்கு அடுத்து வைத்துள்ளார். சரி… நாம் குறளைப் பார்ப்போம்.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.” --- குறள் 621; அதிகாரம் – இடுக்கண் அழியாமை (63)
ஒரு செயல் செய்யும்போது இடையூறுகள் வருமாயின் மகிழ்க; அந்த இடையூறுகள் நம்மை மேன்மேலும் அந்த செயலைச் செய்யத் தூண்டுவதாலும் அப்படி தொடர்ந்து செய்து முடிக்கும்போது வரும் மகிழ்ச்சி இருக்கிறதே அதற்கு ஈடு இணை கிடையாது.
துணிந்து நில்; தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தம்பி என்கிறார்.
இடுக்கண் வருங்கால் நகுக!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios