30/06/2023 (848)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
தலைவனுக்குத் தலைவனாக இருக்க வேண்டுமென்றால் அவனுக்கு அமைய வேண்டுவன படை, குடி, கூழ், நட்பு, அமைச்சு என்றார் முதல் குறளில். காண்க 27/06/2023 (845).
இரண்டாம் குறளில், தலைமைக்கு இயல்பாக என்றும் நீங்காமல் இருக்க வேண்டுவன என்று அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கினைச் சொன்னார். காண்க 28/06/2023 (846).
ஒரு தலைவன் தன் முயற்சியில் சற்றும் தளராது இருக்க வேண்டியவை மூன்று என்று மூன்றாவது குறளில் குறிப்பிட்டார். அவையாவன: தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்றார். காண்க 29/06/2023 (847), 08/05/2023 (795).
ஒரு தலைவனின் சிறப்பு எங்கு வெளிப்படும் என்றால் அவனுக்கு விதிக்கப்பட்ட அறச்செயல்களில் இருந்து விலகாமல் இருப்பதிலும், செய்யக்கூடாத அதாவது அல்லனவற்றை நீக்கி தனது செயல்களை அமைத்துக் கொள்வதிலும், மறனிழுக்கா மானத்திலும் என்றார் நான்காவது குறளில். காண்க 29/06/2023 (847).
ஐந்தாவது குறளில் மேலும் தொடர்கிறார். ஒரு தலைவனானவன் அவன் கீழ் இயங்கும் மக்களுக்காக போதுமான நிதி ஆதாரங்களைப் பெருக்கும் வழிகளை உண்டாக்குவதிலும், அவ்வாறு உண்டாக்கிய வழிகளின் மூலம் வளங்களை ஈட்டுவதிலும், ஈட்டிய பொருள்களுக்குத் தக்க பாதுகாப்பு அளிப்பதிலும், அவ்வாறு பாதுகாத்து வைத்தப் பொருள்களை முறையாக அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதிலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்கிறார்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.” --- குறள் 385; அதிகாரம் – இறைமாட்சி.
இயற்றலும் = பொருள் வரும் வழிகளை உருவாக்குவதிலும்; ஈட்டலும் = அவ்வாறு உருவாக்கிய வழிகளின் மூலம் வளங்களைப் பெருக்குவதிலும்; காத்தலும் = அதனைக் காத்தலும்; காத்த வகுத்தலும் = அந்தச் செல்வங்களை முறையாக பகிர்ந்து அளிப்பதிலும் செலவு செய்வதிலும் வல்லவனாக இருப்பவன் அரசன்.
அரசு என்பது அரசனுக்கு ஆகி வந்துள்ளது.
பொருள் வரும் வழிகளை உருவாக்குவதிலும்; அவ்வாறு உருவாக்கிய வழிகளின் மூலம் வளங்களைப் பெருக்குவதிலும்; அதனைக் காத்தலும்; அந்தச் செல்வங்களை முறையாக பகிர்ந்து அளிப்பதிலும், செலவு செய்வதிலும் வல்லவனாக இருப்பவன் அரசன்.
இறை அதாவது அரசன் அல்லது தலைவனின் சிறப்புகளை இரண்டாவது குறள் தொடங்கி ஐந்தாவது குறள் வரை உள்ள நான்கு பாட்டாலும்(382-385) எடுத்து வைத்தார்.
இப்படி, நமக்கு எளிதில் விளங்கும் வண்ணம் பாடல்களை அமைத்து அதனை அதிகாரங்களாக அடுக்கி, அவற்றையும் ஒன்று சேர இயல்களாக தொகுத்து, தொகுத்தவற்றை பால்களாகப் பிரித்து அமைத்திருக்கும் பாங்கு உலக இலக்கியங்களில் தனித்துவமானது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare