17/09/2021 (206)
குறள்களில் ‘சிரிப்பு’ குறித்த செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் சில நாட்களுக்கு முன்பு! ஆமாங்க. கவனம் இருக்கா? நடுவிலேயே, திருவள்ளுவப் பெருமான் மெல்ல நகைத்து நம்மை அப்படியே குறிப்பறிதல் (111) அதிகாரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். கொஞ்சம் ஜாலியாகத்தான் இருந்தது.
பேராசிரியர் வில்லியம் ஃப்ரை (Professor Dr William Fry), 1960 களில் சிரிப்பின் பயன்களை குறித்து ஆராய்ச்சி செய்து அதன் பல நன்மைகளை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார் என்று பார்த்தோம். அதில் தொடங்கி சில குறள்களையும் பார்த்தோம். ம்ம்!
நாம சிரிச்சுக்கிட்டே இருக்கனும், மகிழ்ச்சியாக இருக்கனும்ன்னு சொன்ன நம் பேராசான, நம்மைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கக்கூடாது என்பதிலும் கவனம் வைக்க வேண்டும் என்கிறார்.
“உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது …
…சேவல் கூட தூங்கும் உலகை எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே … கவிஞர் வாலி, அடிமைப் பெண், 1969
ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து இருப்பவர்களை, இந்த நிலமென்னும் நல்லாள் சிரிப்பாள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அது என்ன நிலமென்னும் நல்லாள்? வேறு யாரும் நகைக்க மாட்டார்களா? அப்படின்னு நம்மாளு ஆசிரியரிடம் கேட்டார்,
அதற்கு ஆசிரியர்: நிலம் என்பது இந்த நிலத்தையும் குறிக்கும்; நிலத்தின் உள்ள வளங்களையும் குறிக்கும்; அதில் வாழும் மாந்தர்களையும் குறிக்கும்; அதைப் பயன்படுத்தி வாழ்வை செம்மையாக்க முயலாமல் இருந்தால் எப்படி என்று இடித்துச் சொல்கிறார். அதனால்தான் ‘நல்லாள்’ என்றும் சொல்கிறார். இந்தக் குறள் உழவு என்கிற அதிகாரத்தின் முடிவுரையாக கடைசியில் சொல்லப் பட்டது. குறளைப் பார்ப்போம்.
“இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.” --- குறள் 1040; அதிகாரம் - உழவு
இலமென்று = ஒரு பொருளும் இல்லையே என்று; அசைஇ இருப்பாரை = அசையாமல் உட்கார்ந்து இருப்பவரை; காணின் = கண்டால்; நிலமென்னும் நல்லாள் நகும் = அள்ள அள்ள கொடுக்கும் தன்மைத்தான நிலமென்னும் நல்லாள் தம்மை பயன்படுத்த வில்லையே என்று மனம் புண்பட்டுச் சிரிப்பாள்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios