28/06/2021 (126)
புறங்கூறாமை(19), பயனில சொல்லாமை(20), தீவினை அச்சம்(21), ஒப்புரவு அறிதல்(22), ஈகை(23), … புகழ்(24)
இல்லறத்துள் எல்லாம் தலையான அறம், இல்லாதவர்களுக்கு ஒன்று ஈவதே. அந்தக் கொடையின் பயன் புகழ். அதுதான் இல்லறம் தொடவேண்டிய இடம். ஆகையால் புகழினை ஈகையைத் தொடர்ந்து அடுத்த அதிகாரமாகவும் இல்லறவியலின் கடைசி அதிகாரமாகவும் வைக்கிறார்.
உடலுக்கு ஊதியம் நாம் ஈட்டும் பொன், மண் முதலிய பொருட்கள். உயிருக்கு ஊதியம் என்ன?
மனிதப்பிறவி எடுத்த இந்த உயிர்க்கு ஊதியம் என்று வள்ளுவப்பெருந்தகை சொல்லுவது அவ் உயிர் சென்றபின்பும் நிலைத்து நிற்கும் புகழ்.
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.” --- குறள் 231; அதிகாரம் – புகழ்
இசைபட வாழ்தல் = புகழ் உண்டாக வாழ்தல்; அதுவல்லது = அது அல்லமால், அது மாதிரி, அது போல
ஊதியம் என்ற சொல்லுக்கு பயன், மதிப்பு, பேறு, பலன், நன்மை என்று பல பொருள் கூறலாம்.
புகழ் உண்டாக வாழ்வதற்கு பல காரணிகள் இருக்கலாம். உதாரணமாக தான் கற்ற கல்வி, தான் பயின்ற வீரம், தான் ஈட்டிய செல்வம் போன்றவை. அதையும் உலகம் பெருமையாக பேசும் சில காலம். அதனால் வரும் புகழ்களை விட ஈதலினால் வரும் புகழ் நிலைத்து நிற்கும், காலம் கடந்தும் நிலைக்கும் என்பதை உணர்த்த ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்றுகூறி ஈதலின் சிறப்பை நம் பேராசான் சுட்டுகிறார்.
‘தான்’ மற்றும் ‘எனது’ அழிந்து அந்த கல்வி, வீரம், செல்வம் மற்றவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, தேவைப்படுபவர்களுக்கு உதவியாகுமெனில் அதுதான் ஈகை.
ஒருவன் சமுகத்தில் ஒரு துறையிலே தோன்ற முற்படுகிறான் என்றால் அவன் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் தனது பங்களிப்பைச் அச்சமுகத்திற்கு அளித்து, ஈந்து புகழ் பெற முயல வேண்டும். அப்படி இல்லையென்றால் அவன் ஏன் வெளிப்பட வேண்டும்? அவன் வெளிப்படாமல் இருப்பதே நல்லது என்று கடிகிறார் நம் வள்ளுவப்பெருந்தகை:
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.” --- குறள் 236; அதிகாரம் – புகழ்
தோன்றுவோம் புகழுடன்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments