29/06/2021 (127)
தோன்றும் போதே புகழுடன் தோன்ற முடியுமா? நல்ல கேள்வி!
‘தோன்றும் போதே’ என்பதற்கு பொருள் ‘பிறக்கும் போதே’ ன்னு பொருள் கண்டால் இந்த குறள் பிழையாகும். பிறக்கும் போதே எப்படி புகழுடன் பிறக்க முடியும்? அதுவும், ‘பிறப்பொக்கும்’ என்ற நம் பேராசான் ‘பிறப்பிலேயே புகழுடன்’ என்று சொல்ல வாய்ப்பில்லை.
வள்ளுவப்பெருமான் பிழை விடுவாரா? இருக்க வாய்ப்பில்லை. இதற்கு பொருள் காண குறள்களின் அமைப்புமுறை நோக்க வேண்டும்.
இந்த குறளை இல்லறவியலின் இறுதியில், பிறந்து, வளர்ந்து, சமுதாயத்தில் அடி எடுத்து வைக்கும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்கு சொன்ன குறள்.
அப்போ, ‘தோன்றும் போதே’ என்பதற்கு என்ன பொருள்? ஒருவன் தன் கடமைகளை செய்ய முற்படும் போது அதற்கு உரித்தான அனைத்தையும் ஆராய்ந்து விதித்தன எது? விலக்கியன எது? என்று தெளிந்து ஒப்புரவு அறிந்து ஈகையை கைகொண்டு தோன்ற வேண்டும். அதுதான் ‘தோன்றின் புகழொடு’ தோன்றுதல்.
அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு உரித்தான பங்களிப்பை சமுதாயத்திற்கு அளித்தால் புகழ் நிலைக்கும். அப்படி இயலாதவர்கள் அத்துறைக்கு வருவதை தவிர்தல் நலம் என்று பொருள் காண்பதுதான் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இந்த உலகத்தார் நீண்ட நாட்களுக்கு புகழ்ந்து பேசுவது எல்லாம் எதைக் குறித்து என்றால் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவிய வள்ளல்களின் புகழைத்தான். அதுதான் காலம் கடந்தும் நிற்கும்.
“உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.” --- குறள் 232; அதிகாரம் – புகழ்
உரைப்பார் = உலகத்தில் ஒன்று குறித்து புகழ்ந்து சொல்லுபவர்; உரைப்பவை எல்லாம்= சொல்லுபவை எல்லாம்; இரப்பார்கொன்று ஈவார் மேல்= இல்லாதவர்களுக்கு ஒன்று கொடுத்து உதவுபவரகள் மீது; நிற்கும் புகழ் = நிலைத்து நிற்கும் புகழேயாகும்
உரை என்பதற்கு சிறந்த, புகழ்மிக்க என்ற பொருள்களும் உண்டு.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios