top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

எனைவகையான் அன்புஅறிவு ... 514, 513

11/12/2022 (647)

எல்லாமும் ஆராய்ந்து வேலைக்கு வைத்தாலும், அது வரைக்கும் நல்லவன் போல இருந்தவன் வேலையில் அவன் வேலையைக் காட்டலாமாம்!


இதுவும் நடக்கத்தான் நடக்குது. வேலைக்குச் சேரும்வரை அவர்களைப்பற்றி தவறு ஒன்றும் கண்டு பிடிக்க முடியாது. வேலைக்குச் சேர்ந்தபின், அந்த இடத்தில் கிடைக்கும் அதிகார பலத்தைக் கண்டு மாறிவிடுபவர்கள் உண்டு.

அதைக் கவனித்து அவர்களை நீக்க வேண்டும் என்கிறார் நம் பேராசான்.


எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.” --- குறள் 514; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


எனைவகையான் தேறியக் கண்ணும் = எல்லா வகையிலும் ஆராய்ந்து வேலைக்கு சேர்த்துக் கொண்டாலும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் = அவர்களில் பலர், வேலையில் வேறு மாதிரி நடந்து கொள்வார்கள்.


வேறு மாதிரி என்றால் எப்படி?


உடன் பணியாற்றுபவர்களிடம் கடுமை, அதாவது அன்பின்மை;


செய்யும் வேலையில் தனது அறிவினைப் பயன்படுத்தாது அலட்சியமாக இருத்தல் (non application of mind);


எடுக்கும் பணிகளில் தெளிவுடனும், உறுதியுடனும் செயல்படாத தன்மை; மேலும்


அதிகாரத்தில் மயங்கி, தவறான ஆசைகளின் தூண்டுதலால் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுதல். லாவண்யம் என்றால் கவர்ச்சி, மோகம். அழகு என்ற பொருளும் உண்டு. (லாவண்யா என்றால் அழகி!)


மேலே கண்ட நான்கு பண்புகளும், பணிக்கு அமர்த்தப் பட்டவர்களிடம் தொடருகின்றனவா என்று அவர்கள் வேலை செய்யும் வழிமுறைகளைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் நம் பேராசான். அதன் பின்தான் அவர்களுக்குத் தொடர்ந்து வேலையைக் கொடுக்க வேண்டுமாம்.


அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.” --- குறள் 513; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


தேற்றம் = தெளிவு, உறுதி


அன்பு, அறிவு, தெளிவு, தவறான ஆசைகள் இல்லாமல் இருத்தல் முதலிய நான்கு பண்புகளும் தொடர்கிறதா என்று அறிந்து அவர்களை அப்பணியில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இது ஒரு continuous assessment.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






Comments


Post: Blog2_Post
bottom of page