07/03/2022 (374)
நம்மாளு: நம்மத் தலைவரைப் போய் மோசமானவர்ன்னு நினைக்கலாமா? அதெல்லாம் தப்புப்பா, அவர் எப்படி நம்மையெல்லாம் கவனிச்சுக்கறார். அதுதான் நம்ம மனசிலே ஓடனும். தப்பா நினைச்சா நமக்குதான்பா அசிங்கம்.
இப்படி தனக்குள் பேசிக்கொண்டிருக்கிறார் நம்மாளு.
நமக்கு பிடித்த ஒருவர் தப்பு பண்ணினாலும் நாம அதை கண்டும் காணாதது போல போவோம். மேலும், அதற்கு ஒரு காரணமும் இருக்கும்ன்னு நினைப்போம். அதுதான் அன்பு கொண்ட நெஞ்சம் செய்வது.
சாதாரண நட்பிலேயே இவ்வளவு நெகிழ்ச்சி இருக்கும் போது, இல்லறத்தில் இருக்கும் இணையர்களுக்குள் இருக்கும், இருக்க வேண்டிய தன்மையை சொல்கிறார் ஒரு குறளில்.
“எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.” --- குறள் 1298; அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல்
உயிர்க்காதல் நெஞ்சு = உயிரினும் இனிய அன்புடையவனின் மேல் காதல் கொண்ட நெஞ்சம்; எள்ளின் = அவரைப் பற்றி தவறாக எண்ணினால்; இளிவாம் என்று எண்ணி = அது இழிவு என்று எண்ணி; அவர்திறம் உள்ளும் = அவருடைய நல்ல செயல்களை எண்ணும்.
இதே செய்தியை பலவகையிலே நம் பேராசான் சொன்னதைப் பார்த்திருக்கிறோம். மீள்பார்வைக்காக – காண்க 06/05/2021 (109), 12/06/2021 (110), 03/12/2021 (283), 29/12/2021 (308)
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” --- குறள் 109; அதிகாரம் -செய்ந்நன்றியறிதல்
இல்லறத்தின் அடிநாடியே அன்புதான் என்பதை திரும்ப திரும்பச் சொல்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. அன்பின் வழி நிற்பின் நட்புகள் நம்மை அழிக்கக்கூடியது போல சில செய்தாலும், அவர்களின் அன்பான தொடர்புகளை அறுத்துக் கொள்ள மாட்டார்களாம்.
(அப்பா, உயிரே போகுதுன்னு சில சமயம் சொல்லுவோம். ஆனால், உயிர் போவது இல்லை. அது நமது அதிகமான கற்பனை.)
“அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.” --- குறள் 807; அதிகாரம் - பழைமை
(கேண்மை = நட்பு)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(யோசனை பண்ணிட்டு இருந்தப்போ ஒரு ஆட்டோவில் எழுதியிருந்தது: “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை.”)
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments