20/08/2022 (539)
…
கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் … மகாகவி பாரதி
கும்மியடி பாடலில் இவ்வாறு சொல்கிறார் மகாகவி.
“கும்மியடி! தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.
கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் …
“கற்பு” என்று சொல்வோம் என்றால் அது இருவர்க்கும் பொது. அதுதான் பெருமை. என்கிறார் மகாகவி.
மகளிருக்கு மன ஒருமை (கற்பு) முக்கியம் என்றும், அது பெருமை என்றும் சொல்வீர்களானால், அவ்வாறே ஒருவன் தன்னைத்தான் அந்நெறியில் செலுத்தினால்தான் அவனுக்கும் பெருமை என்கிறார் நம் பேராசான்.
“ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு.” --- குறள் 974; அதிகாரம் - பெருமை
ஒருமை மகளிரே போல = மன ஒருமையோடு இருக்கும் மகளிரைப் போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு = பெருமை ஒருவனுக்கு வேண்டும் என்றால் அவனும் மன ஒருமையோடு இருந்தால்தான் உண்டு.
மன ஒருமையோடு இருக்கும் மகளிரைப் போல பெருமை ஒருவனுக்கு வேண்டும் என்றால் அவனும் மன ஒருமையோடு இருந்தால்தான் உண்டு.
இவ்வுலகில் ஆண், பெண் சமத்துவம் பேசி அதைப் பதிவும் செய்த முதல் விஞ்ஞானி நம் வள்ளுவப் பெருந்தகைதான் என்று அறிஞர் பெருமக்கள் கருதுகிறார்கள்.
இரண்டு அடிகளில் நம் பேராசான் அடித்த கும்மியை, நம் மகாகவி இழுத்து அடி, அடியென்று கும்மியடித்துள்ளார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments