top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

ஒழுக்கம் உடைமை குடிமை ... 133, 291, 953

Updated: Jul 23, 2022

06/09/2021 (195)

திருக்குறளில், அதிகாரம் 96 லிருந்து 108 வரை ஒரு இயலாக அமைந்துள்ளது. இது பொருட்பாலின் இறுதியில் உள்ளது. இந்தப் பாலை இருவகையாக அழைக்கிறார்கள். பரிமேலழகப் பெருமான் இதை ‘ஒழிபியல்’ என்றும், மற்ற பெருமக்கள் இதை ‘குடியியல்’ என்றும் கருதுகிறார்கள்.


வேறு எங்கும் சொல்லப்படாதவை இந்த இயலில் இருப்பதால் ‘ஒழிபியல்’ என்கிறார் பரிமேலழகப் பெருமான்.

ஆனால், இந்த இயலில் வள்ளுவப் பெருமான் எடுத்துரைப்பது குடிமக்களை ஒட்டியே அமைந்துள்ளது. குடிமக்கள் செய்ய வேண்டியவை: குடிமை(96), மானம் (97), பெருமை (98), சான்றாண்மை (99), பண்புடைமை (100), நன்றியில் செல்வம் (101), நாணுடைமை (102), குடிசெயல்வகை (103), உழவு (104) என்ற ஒன்பது அதிகாரங்களும், குடிமக்கள் தவிர்க்க வேண்டியவை: நல்குரவு (105), இரவு (106), இரவச்சம் (107), கயமை (108) ஆகிய நான்கு அதிகாரங்களுமாக அமைந்துள்ளது. இதைப் பார்க்கும்போது ‘குடியியல்’ என்றாலும் பொருத்தமாகவே உள்ளது.

இதை உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். இது நிற்க.


சிரிப்பைப் பற்றிய சிந்தனையைத் தொடர்வோம்!

குடிமை (96) அதிகாரத்திலிருந்து ஒரு குறள் ‘நகை’ என்றே தொடங்குகிறது.


நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.” --- குறள் 953; அதிகாரம் - குடிமை


வாய்மைக் குடிக்கு = வாய்மை பொருந்திய குடிக்கு; நகை = ஒருவர் உதவி நாடி வரும்போது முகமலர்ச்சியும்; ஈகை = இருப்பதை கொடுத்து உதவுதலும்; இன்சொல் = இனிய சொற்களைப் பேசுதலும்; இகழாமை = அவர்களை எள்ளி நகையாடாமல் இருப்பதும்; நான்கும் வகை என்ப= ஆகிய நான்கு பண்புகளையும் கொண்டிருத்தல் என்பர் பெரியோர்.


வாய்மைக் குடி என்றால் என்ன? சொல்லிலும், செயலிலும் தூய்மை.

நல்லதைச் சொல்லனும்; சொன்னதைச் செய்யனும்; செய்வதைச் சொல்லனும். இந்த ஒழுக்கம் இருந்தால், அதுதான் வாய்மைக் குடிமை. (பொய்மை இல்லாதது வாய்மை).


வாய்மை எனப்படுவது என்னவென்று நாம ஏற்கனவே பார்த்துள்ளோம்:

வாய்மைஎனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.” --- குறள் 291: அதிகாரம் - வாய்மை


குடிமைக்கு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.” --- குறள் 133; அதிகாரம் – ஒழுக்கமுடைமை


ஒழுக்கம் உடைமை குடிமை = ஒழுக்கமாக இருப்பதே குடிமைக்கு அழகு; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் = ஒழுக்கம் தவறினால் அது இழிவானப் பிறப்பையே தரும்


மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம். சிரிச்சுகிட்டே இருங்க!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.




9 views0 comments

Comentarios


Post: Blog2_Post
bottom of page