குறிப்பறிதல் அதிகாரத்தின் கடைசி குறள். ஒரு முடிவுரை போல முத்தாய்ப்பாக சொல்லப் போகிறார். கவிச்சக்ரவர்த்தி கம்பர் தொடங்கி அனைவருக்கும் கருத்து ஊற்றாக இருக்கும் குறள்.
வாய் மட்டும்தான் பேசுமா என்ன? காது மட்டும் தான் கேட்குமா என்ன?
நம் புலன்கள் அனத்துமே பேசும், கேட்கும், சுவைக்கும்… உடலின் மொழியறிந்தால், அதனின் குறிப்பு அறிந்தால் உணரலாம்!
இதுவரை:
முதல் பார்வை நோயானது; அடுத்தப் பார்வை மருந்தானது. சின்னதொரு கள்வுப் பார்வை சிறகடிக்க வைத்தது;
அடுத்ததொரு பார்வை காதல் பயிருக்கு நீர் பாய்ச்சியது; எங்கோ கொண்டு சென்றது.
அடுத்து பார்க்கும் போது பார்க்காமலும் பார்க்காத போது பார்த்தலும்
தொடர்ந்தது.
சிறங்கணித்த சிறு பார்வையும் சிறுநகையும் அடடா அடடா
அடுத்து சிறிய ஊடல், சுடு சொல், சுட்டெரிக்கும் பார்வை நாடகம். அதிலே இருக்கும் சுவை இன்னும் உறுதிப்படுகிறது.
அறிவிக்கவில்லை, யாருக்கும் தெரிவிக்கவில்லை. தெரியாதவர்கள் போல நடிப்போம் என்று முடிவு ஏற்படுகிறது. பேச்சு குறைகிறது.
“… மௌனம் பேசியதே தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே …. “ கவிப்பேரரசு வைரமுத்து
பேச்சுக்கு பயனில்லை.
“எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி
கண்ணோடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோகினாள் அவளும் நோக் கினாள்” – கம்பராமாயனம்
‘உணர்வும் ஒன்றிட’ இது நடக்கும். பார்க்கப்படும் பொருளும் பார்ப்பவரும் ஒன்றாகிவிடுதல் – இது தான் ஞான முயற்சியின் ஆகச்சிறந்தப்பயன் என்கிறார்கள் அறிஞர்கள். அது ஒரு உயரிய நிலை. இது நிற்க.
குறளுக்கு வருவோம்:
“கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.” --- குறள் 1100; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
“கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே ….” ---கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios