31/01/2021 (14)
“கற்றதனால்ஆயபயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.” குறள் ---2; அதிகாரம் – கடவுள் வாழ்த்து
ஆயபயன் = சிறந்த, உயர்ந்த பயன்
என் = என்ன?
வாலறிவன் = அருளார்கள், அறிவினில் மூத்தப் பெருந்தகையாளர்கள், அறிவின் உச்சம் தொட்டோர், உண்மையான அறிவுடையோர், முற்றுணர்ந்தவர் – என்றெல்லாம் அறிஞர் பெருமக்கள் பொருள் கூறுகிறார்கள்.
கொல் = இலக்கணத்தில் ‘அசைச்சொல்’ என்று கூறுகிறார்கள். அசைச் சொற்களுக்கு பொருள் இல்லையாம். கவிதையின் கூட்டு அமைய பயன் படுத்தும் சொற்கள்.
நற்றாள் தொழாஅர் = வணங்கி நிற்கும் (கற்கும்) பண்பு
தொழாஅர் – தொழா…ர் – ‘ழா’ என்ற எழுத்தை நீட்டி ஒலிப்பதற்காக ‘அ’ என்ற எழுத்து போடப்பட்டுள்ளது. உச்சரிப்பதற்காக அல்ல.
என்ன இன்றைக்கு ‘இலக்கணமா’ போகுதேன்னு தானே நினைக்கிறிங்க. அடியேன் இலக்கணம் கற்கின்ற பெருமையை எங்கே போய் காட்டுவது. நம்ம குழுவிலே தமிழ் ஆசிரியர்களும், தமிழ் புலவர்களும் இருப்பது தெரிந்தும் துணிந்து எழுதிட்டேன். குறையிருப்பின் சுட்டவும்.
சுருக்கமாக: கல்வியிலிருந்து அறிவு, அறிவிலிருந்து ஒழுக்கம், அதிலும் அன்பு, அன்பிலிருந்து அருள், அதனின் தொடர்ச்சி அருளாளர்களை வணங்கி நிற்பதும், கற்பதும்.
நிற்க.
வனங்கி கற்கனும். அவ்வளவுதான். அதுவும் எப்படின்னு வள்ளுவப்பெருமான் அழகா சொல்றார். இருப்பவர்களிடம் இல்லாதவர்கள் பணிந்து உதவி கேட்பது போல கற்கனுமாம். அந்த குறள்:
“உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்” --- குறள் 395; அதிகாரம் - கல்வி
ஏக்கற்றும் = எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இருந்தாலும்!
நம்மாளு: கேட்டுட்டா அப்போ மட்டும் தான் முட்டாள்; கேட்காம விட்டுட்டா எப்பவுமே முட்டாளு!
அது சரி. கற்க, கற்க என்ன தெரிய வரும்னு வள்ளுவர் சொல்றாருன்னு தேடுவோம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments