20/03/2021 (62)
உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 1
உஞற்றுபவர்க்கு இரண்டு குறள்கள் 620, 1024; உஞற்றிலவர்க்கு இரண்டு குறள்கள் 604, 607.
‘உஞற்று’ன்னா முயற்சின்னு பொருள். இந்த சொல் இப்போ வழக்கு ஒழிந்து போயிட்டுது. எது ஒன்னும் பயன்படுத்தாம போனா வீணா போகும்ங்கிறது விதி.
அறுபத்தியொராவது (61) அதிகாரம் மடியின்மை. மடியின்மைன்னா சோம்பல் இல்லாமா துடிப்பா செயல் புரியறதுன்னு பொருள். துடி X மடி!
‘செய் அல்லது செத்து மடி’ – இங்கே ‘தொலைந்து போ’ ன்ற பொருள் படுது.
‘மடி’யா இருக்கேன்னா சுத்தமா இல்லைன்னா ஓய்வா இருக்கேன்ங்கிற பொருள்படவும் பயன் படுத்தறாங்க. . நிற்க.
‘மடியின்மை’ அதிகாரத்திலே தான் உஞற்றி லவர் பற்றிய இரண்டு குறள்களும் இருக்கு.
“குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. “---குறள் 604; அதிகாரம் - மடியின்மை
மாண்ட உஞற்றி லவர்க்கு = சிறந்த பெருமுயற்சி எடுக்காதவங்க; மடிமடிந்து = சோம்பலினாலே சோம்பிக்கிடந்து; குடிமடிந்து = தான் மட்டுமில்லாம தன் குடிப் பெருமையும் கெடுத்து; குற்றம் பெருகும் = தப்பு தண்டா பண்றா மாதிரி ஆயிடும்.
சிறந்த பெருமுயற்சி எடுக்காதவங்க, சோம்பலினாலே சோம்பிக்கிடந்து, தான் மட்டுமில்லாம, தன் குடிப் பெருமையும் கெடுத்து, தப்பு தண்டா பண்றா மாதிரி ஆயிடும்!
இல்லாமை, இயலாமை இது தான் எல்லா குற்றச்செயல்களுக்கும் அடிப்படைக்காரணம். “இல்லாத கொடுமை சார், வேற என்ன பண்ண சொல்ற? அதான் இப்படி பண்ணிட்டேன் “ - இதான் பதில் பெரும்பாலான குற்றங்களுக்கு.
இல்லாமை, இயலாமை வருவதற்கு முதல் காரணம் முயலாமை; முயலாமைக்கு அடிப்படை சோம்பல்; சோம்பலுக்கு அடித்தளம் ஊக்கமின்மை; ஊக்கமிழப்பதற்கு காரணம் நம்பிக்கையின்மை. நம்பிக்கையில்லாம போவதற்கு காரணம் மனசு விட்டு போவது. மனசு கெட்டு போச்சுனா உடம்பு கெட்டு போகுது. அப்போ எல்லாத்துக்கும் அடிப்படை மனசு.
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும், நெருங்கினப் பொருள் கைப்படவேண்டும், மண் பயனுற வேண்டும்… மகாகவி பாரதி
மனசு வைப்போம்! மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments