top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

குடியாண்மை உள்வந்த ... 609

04/03/2023 (730)

குடிகளுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால், குடி ஆண்மை அதாவது குடிகளை நிர்வகிப்பதில் பற்றாக்குறை இருக்குமானால், நிர்வகிக்கப் போதுமான அளவு வருவாய், வாய்ப்புகள் இல்லாமல் இருக்குமானால்....


இப்படி பல ‘ஆனால்’களுக்கு என்ன தீர்வு? என்று கேட்கிறார் நம் பேராசான்.

ஒரே தீர்வுதானாம்! இதைக் கொஞ்சம் ஆராய்ந்துபார். ‘அதை’ நீக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.


நம்மாளு: எதை நீக்கிவிட்டால் ஐயா?


அங்கே, மடி ஆண்மை, அதாவது சோம்பலின் ஆட்சி நடந்து கொண்டுள்ளதா என்று ஆராய். அதை நீக்க காட்சிகள் மாறும். உன் ஆட்சியும் சிறக்கும் என்கிறார்.


குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.” --- குறள் 609; அதிகாரம் – மடியின்மை


ஒருவன் மடி ஆண்மை மாற்ற = ஒருவனிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சோம்பல் என்னும் தன்மையை மாற்றி ஊக்கம் என்பதை ஆட்சி செய்ய வைத்தானெனில்;

குடியாண்மை உள்வந்த குற்றம் கெடும் = குடிகளிடமும், குடிகளை நிர்வகிப்பதிலும் உள்ள குறைபாடுகள் நீங்கும், மறையும், அழியும்.


தலைவனாக இருக்கும் ஒருவனிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சோம்பல் என்னும் தன்மையை மாற்றி ஊக்கம் என்பதை ஆட்சி செய்ய வைத்தானெனில் குடிகளிடமும், குடிகளை நிர்வகிப்பதிலும் உள்ள குறைபாடுகள் நீங்கும், மறையும், அழியும்.


சோம்பலை நீக்குவது அனைவருக்குமானது. அதிலும், தலைமைக்கு அது மிக முக்கியமானது!


இது நிற்க.


தை மாத முதல் நாளை நாம் பொங்கல் திருநாளாக அதாவது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். நமது அண்டை மாநிலமான கேரளாவில், நமது ஆவணி மாதத்தில் அறுவடைத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். அதை ஓணம் என்று அழைக்கிறார்கள். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்கிறார்கள்!


ஓணம் என்றால் ‘ஓணம் சாத்யா’ தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. மலையாளத்தில் ஒரு பழமொழி இருக்கு. “கானம் விற்றாவது ஓணம் உண்”. கானம் என்பதற்கு சிலர் விதை நெல் என்கிறார்கள், சிலர் நிலம் என்கிறார்கள். எது எப்படியோ ஓணம் சாத்யாவை சாப்பிடுங்க!


ஓணம் சாத்யாவில் குறைந்தஅளவு 64 வகை உணவு வகைகள் இருக்குமாம். அறுசுவைகளில் கசப்பைத் தவிர்த்து அனைத்து சுவைகளும் இருக்குமாம். நானும் சில சமயம் உண்டதுண்டு! எப்படித்தான் எனது பெருமையை உங்களுக்குச் சொல்வது!


மலையாள நண்பர்கள் இருந்தால் முயலுங்கள். இல்லை என்றால் உணவகங்கள் இருக்கவே இருக்கு.


ஒரு இரகசியம் சொல்லனும் கொஞ்சம் கிட்ட வாங்க. "ஆசிரியர்தான் ஓணத்தைப் பற்றி படித்துச் சொல் என்றார். என்ன செய்ய? படிப்பதா? நமக்கு அது ஆகாது என்பதால், எனக்குத் தெரிந்ததை அடிச்சுவிட்டுருக்கேன்!" யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்.


நாளை தொடரலாம். மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)








Kommentare


Post: Blog2_Post
bottom of page