06/10/2022 (584)
புனை, புனல், புணை …
‘புனை’ என்றால் ‘ஒரு கதை கட்டி ஓட விடுவது’ என்று ஒரு பொருள் இருக்கு. புனை என்றால் புனைதல், உருவாக்குதல், கற்பனை என்றெல்லாம் பொருள் இருக்கின்றது.
புனல் என்றால் நீர் ஓடும் பாதை, ஆறு, வயல், கொல்லை இப்படி பல பொருள்கள். இந்தப் புனல் தான் ஆங்கிலத்தில் FUNNEL ஆகிவிட்டது
அதாங்க, நாம் இப்போது நீர் போன்ற பொருட்களை சிந்தாமல் ஊற்ற பயன்படுத்தும் புனலாகிவிட்டது. இது நிற்க.
ஓடும் நீர் உருவாக்கும் அல்லது புனையும் பாதைதான் புனல் அல்லது ஆறு.
அந்தப் புனலில் செலுத்தப்படும் படகுகள் தான் புணை.
புணை என்றால் நீர் வழித்தடத்தைப் பயன்படுத்தி நாமெல்லாம் செல்ல (transportation) கண்டுபிடித்த ஒரு இயந்திரம்தான் புணை.
பண்டைத் தமிழர்கள் என்ன கண்டு பிடிச்சாங்கன்னு நிறைய பேர் கேள்வி எழுப்புகிறார்கள். புணை என்பதும் ஒரு பெரும் கண்டுபிடிப்புதான். அந்தப் புணையிலும் இருவகையைக் கண்டுப்பிடித்தார்கள். ஒன்று முன் புணை(canoeing) அல்லது தலைப் புணை, மற்றோன்று பின் புணை அல்லது கடைப் புணை (rowing).
குறுந்தொகையிலிருக்கும் ஒரு பாடலில் இந்தக் குறிப்பு இருக்கிறது.
“தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்; கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், ஆண்டும் வருகுவள். --- குறுந்தொகை 222
அதாவது நான் முன்னாலே போனா அவள் பின்னாலே வருவாள் என்பது போல! முன்புணையில் சென்றால் அவளும் முன் புணையில் தொடர்ந்து வருவாள். நான் பின் புணையில் போனால் அவளும் பின் புணையில் வருவாள். இரண்டையும் விட்டு நான் ஆற்றில் குதித்து நீந்தினால் அவளும் குதித்து நீந்துவாளாம்!
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்குன்னு கேட்கறீங்க அதானே?
அதாங்க, அவன் எங்கே போனாலும் பின்னாடியே வந்தவளைக் காணோம். அதான் அவனின் பெருப்பிரச்சனையாக இருக்கு.
இந்தக் காமப்புனல் கடும் புனலாக இருக்கு. என்னுடைய மிடுக்கையும், நாணத்தையும் ஒரு சேர அடித்துக் கொண்டு போகிறது. அதனால் தான் இப்போது மடலேறத் துணிந்துவிட்டேன் என்று புலம்புகிறான் அவன்.
“காமக் கடும்புனல் உய்க்குமே நாணோடு
நல்லாண்மை என்னும் புணை.” --- குறள் 1134; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
என் நல்ல பண்புகளான மிடுக்கையும், நாணத்தையும் எந்த ஒரு ஆற்றிலும் (ஆறு என்றால் வழி. ஆறு என்பதால் அதில் கடக்க உதவுது புணை) படகாக இதுவரை பயன்படுத்தி வந்தேன். ஆனால், இந்தக் காமக் கடும் புனலில் விழுந்த பின் எனது அந்த நல்ல பண்புகளும் அடித்துசெல்லப்படுகின்றது. நான் என்ன செய்வேன்?
நாணோடு நல்லாண்மை என்னும் புணை = என் நல்ல பண்புகளான மிடுக்கையும், நாணத்தையும்தான் எந்த ஒரு ஆற்றிலும் படகாக இதுவரை பயன் படுத்தி வந்தேன்.
காமக் கடும்புனல் உய்க்குமே = ஆனால், இந்தக் காமக் கடும் புனலில் விழுந்த பின் எனது அந்த நல்ல பண்புகளும் அடித்துசெல்லப்படுகின்றது.
புனல் = ஆறு; புணை = படகு. இதைக் குறித்துச் சொல்லத்தான் அந்த நீண்ட அறிமுகம்! சொற்களின் உருவாக்கத்தில் பல இரகசியங்கள் பொதிந்து இருக்கின்றன.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments