24/10/2021 (243)
உள்ளக் குறிப்பை உணர்பவர்களை தெய்வம் போல போற்றனும்ன்னு குறள் 702ல் சொல்லியிருந்தார் நம் பேராசான்.
நம்ம ஆளுங்களுக்கு ஒரு வழக்கம் இருக்கு. போற்றனும் சொல்லியிருக்காரு ஐயன்: நிச்சயம் போற்றுவோம்ன்னு போற்றிட்டு அங்கிருந்து நகர்ந்துடுவாங்க.
திறமைசாலிகள் அவர்களின் திறமைகளை உயிரைக் கொடுத்து காண்பிப்பார்கள்.
நம்மாளு என்ன பண்ணுவார் என்றால் ‘அடடா பிரமாதம், இப்படி யாராலும் பண்ண முடியாது, அது, இது என்று பாராட்டிட்டு நகர்ந்துடுவாரு. திறமைசாலிக்கும் வயிறு இருக்கு, குடும்பம் இருக்கும். திறமைசாலிகளை ஆதரிக்கனும் என்ற கடமை நமக்கு இருக்கு என்றெல்லாம் யோசிக்க மாட்டார். இந்த மன நிலை கிழே இருந்து மேல் மட்டம் வரைக்கும் எல்லாருக்கும் இருக்கு.
திறமைகளை மதிக்காத நாடு வளருவது கடினம். நாம எப்ப பார்த்தாலும் அந்த காலத்தைப் பாரு எப்படி செழிப்பாக இருந்தது, இப்போ அதெல்லாம் எங்கே போயிட்டுதுன்னு புலப்பிட்டு இருப்போம். பிரயோசனம் இல்லை ராஜா.
அந்த மாதிரி திறமைசாலிகளை நாட்டின் ஒரு பகுதியைக் கொடுத்தாவது அவர்களை போற்றி பக்கதிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்லலைங்க. நம்ம வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார். நீங்களே பாருங்க இந்தக் குறளை:
“குறிப்பின் குறிப்புணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.” --- குறள் 703; அதிகாரம் – குறிப்பறிதல்
குறிப்பின் குறிப்பு உணர்வாரை = நாம் சொல்ல வந்த குறிப்பு இவரிடம் செல்லுமா, இவர் உள்ளத்தின் குறிப்பு என்ன என்று உணர்பவர்களை; யாது கொடுத்தும் கொளல் = ஒரு தலைமையானது, அவர்களிடம் உள்ளதில் ஒரு பகுதியைக் கொடுத்தாவது கொள்ள வேண்டும். (அந்த காலத்தில் மன்னர்களுக்குச் சொன்னது இது. நாட்டின் ஒரு பகுதியைக் கொடுத்தாவது திறமைகளைத் தக்க வைத்துக்கொள் என்கிறார்.)
வளம் மிக்க நாடுகள் என்று சொல்கிறோமே அதன் ரகசியமே இங்கேதான் ஒளிந்திருக்கிறது. தெருப் பாடகராயினும், இசைக் கலைஞர்களாயினும், எந்த ஒரு பணியில் இருந்து செயல்படும் திறமைசாலிகளையும் அந்த நாடுகள் போற்றி பேணுவதையும் உயர்த்திப் பிடிப்பதையும் காணலாம். இது தான் ரகசியம். போற்ற போற்றதான் நம் திறமைகளும் வளரும். இது உளவியல் உண்மை. அதனால்தான் தமிழில் நிறைய போற்றி பாடல்கள் உள்ளது.
தமிழ் அறிஞர்களைத் தொடர்ந்து பாதுகாக்க தவறியதால்தான் நமக்கு இந்த நிலைமை. இதுதான் குறிப்பு. உணர்வோம், உயர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments