21/04/2023 (778)
‘ஒரு’ என்றால் ஒழிதல், ஒழித்தல், விலக்குதல், நீக்குதல், தனிமைப்படுத்து என்றெல்லாம் பொருள் எடுக்கலாம் என்று பார்த்தோம்.
ஒரி என்றாலும் அவ்வாறே பொருள். ‘ஒரீஇ’ என்பது ஒரி அளபெடுத்து நிற்பது. நாம் அறிவுடைமை எனும் அதிகாரத்தில் ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 07/08/2021 (165). மீள்பார்வைக்காக:
“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.” --- குறள் 422; அதிகாரம் – அறிவுடைமை
ஒரீஇ = நீக்கீஇ; சென்ற இடத்தால் செலவிடா(து) = புலன் போகும் வழியில் மனத்தைச் செல்லவிடாது; தீது ஒரீஇ நன்றின்பால்உய்ப்பது அறிவு = அதை ஆராய்ந்து தீமையை நீக்கி நன்மையின் வழி செலுத்துவது அறிவு.
புலன் போகும் வழியில் மனத்தைச் செல்லவிடாது, அதை, ஆராய்ந்து தீமையை நீக்கி நன்மையின் வழி செலுத்துவது அறிவு.
இது நிற்க.
‘ஒரு’ விற்கு எதிர்ச்சொல் ‘ஒரா’.
‘ஒரா’ என்றால் சேர்ந்து இருத்தல், நீங்காமல் இருத்தல், பிரியாமல் இருத்தல்.
‘ஒரார்’ என்றால் விலக்காதவர் என்று பொருள்.
விலக்க வேண்டியச் செயல்களை, கடிந்து விலக்காமல், அதனையே செய்யத் துணிவார்க்கு அந்தச் செயல்களே முடிந்தபின் துன்பம் தரும்.
அது என்ன முடிந்தபின்?
ஆமாம். விலக்க வேண்டிய வில்லங்கமானச் செயல்களைச் செய்ய முயலும் போது, நம் பேராசான் சொல்லியது கவனத்துக்கு வந்து, அந்தச் செயல்களைச் செய்யாமல் விட்டால் துன்பம் வராது அல்லவா?
ஒருவர், விலக்க வேண்டியவற்றிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விலகிக் கொண்டு தன் தவறினைத் திருத்திக் கொள்ளலாம்.
அப்படி இல்லாமல் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்! எனவே எல்லா முயல்களின் கால்களையும் மூன்றாக குறைப்பேன் என்றால்?
இது நிற்க. நாம் குறளுக்கு வருவோம்.
“கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.” --- குறள் 658; அதிகாரம் – வினைத்தூய்மை
கடிந்த = அறத்தின்பால் விலக்க வேண்டியன என்று சொல்லப்பட்டவைகளை;
கடிந்து = விலக்காமல்; ஒரார் = ஏற்றுக் கொண்டு விலக்க மறுப்பவர்கள்;
செய்தார்க்கு = (மேலும் அச்செயல்களைத் தொடர்ந்து) செய்தவர்களுக்கு;
அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் = அந்தச் செயல்கள் அவர்கள் நினைத்தது போல் நிறைவேறினாலும் முடிவில் துன்பமேத் தரும்; பீழை = துன்பம்
அறத்தின்பால் விலக்க வேண்டியன என்று சொல்லப்பட்டவைகளை விலக்காமல், அதனையே ஏற்றுக் கொண்டு விலக்க மறுப்பவர்கள், அச்செயல்களைத் தொடர்ந்து செய்தால், அந்தச் செயல்கள் அவர்கள் நினைத்தது போல் நிறைவேறினாலும் முடிவில் துன்பமேத் தரும்.
பரிப்பெருமாள் பெருமான், இந்தக் குறளில் ஒன்றினை கவனிக்கச் சொல்கிறார், அதாவது, நம் பேராசான், “முடிந்தாலும்” என்று சொல்லியுள்ளார். அந்த உம்மையால், முடிவதற்கு முன்பேயும் பீழை தரும் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments