02/02/2021 (16)
சும்மா இருந்தே ‘சூப்பர் ஸ்டார்’ ஆவது எப்படி?
வள்ளுவர் சொன்ன ரகசியம் தான் இன்றைக்கு செய்தி – “ச்கிப்” பண்ணாம படிங்க! (யூ ட்யூபர்ஸ் மட்டும் தான் சொல்வாங்களா என்ன?)
நம்மாளு: இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு சொல்றீங்க. நானும் ரொம்பவே முயற்சி பண்றேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. எதுவுமே பண்ணாம உயர முடியாதா சார்?
வள்ளுவப் பெருமான்: ம்ம். அப்படியா! இருக்கு. ஒரு விஷயம் இருக்கு. அது மட்டும் உன் கிட்டே இருந்தா எல்லாம் தானா வந்துடும்.
நம்: சார்ர். இதை ஏன் சார் முதல்லேயே சொல்லலை. என்னா விஷயம் சார் அது. எங்கே சார் கிடைக்கும். எவ்வளவு செலவு ஆகும்.
வ.பெ: செலவே கிடையாது. எங்கேயும் போக வேணாம். இருந்த இடத்திலேயே பெரிய ஆளா ஆயிடலாம்.
(நம்மாளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை. பரபரப்பா)
நம்: தெய்வமே, அதை எனக்கு மட்டும் சொல்லிடுங்க தெய்வமே. ப்ளீஸ்.
வ.பெ: உனக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும் அது பொதுதான். அது மட்டும் சரியா இருந்தா எல்லாருமே பெரிய ஆளா ஆயிடலாம். நீ என்ன பண்ணு. என்னோட வா ஒரு இடத்துக்கு போகலாம்.
நம்: சார், எங்கேயும் போக வேணாம்னு சொன்னீங்க?
வ.பெ: பரவாயில்லை கிளம்பு.
நம்மாளும், வள்ளுவப்பெருமானும் கிளம்பி ஒரு குளத்துக்கு போறாங்க.
நாமளும் பின்னாடியே போவோம். அங்கே குளத்தைக் காட்டி என்ன தெரியுதுன்னு வள்ளுவர் கேட்கிறார். நம்மாளுக்கு லேசா எரிச்சல்.
தண்ணியும் தாமரையும் தெரியுதுன்றான். வள்ளுவர், அந்த பூவை தண்டோட ஒரு அரை அடி தூக்குன்றார். இது என்ன பிரமாதமான்னு நம்மாளு அதை தூக்கப் போக அந்த பூ கையோட வந்துடுது. தண்டோட தூக்க முடியலை.
சரி, நீ நாளைக்கு வான்னு சொல்லிட்டு வள்ளுவர் கிளம்பிட்டார்.
அன்றைக்கு நல்ல மழை.
மறு நாள் ...
நம்மாளு: சார், என்னா சார் தண்ணி இவ்வளவு உசந்து இருக்கு. இரண்டு அடி இருக்கும் போல. பூவும் மேல வந்துட்டுதுன்னு ஆச்சரியாமா வள்ளுவரைப் பார்க்கிறார்.
வ.பெ: சரியா பிடிச்சிட்டே. நேற்று கொஞ்சம்கூட பூவை உயர்த முடியலை. ஆனா, இன்றைக்கு அதுவா இரண்டு அடி உயர்ந்திருக்கு. அது போல, ஒருத்தர் தன் உள்ளத்தை உயர்த்திட்டா எல்லாம் தானா வரும். உள்+ அம் = உள்ளம். ‘அம்’ ன்னா அழகு, செழுமை. உள்ளத்திலே கள்ளம் இல்லாம ஊக்கம் இருந்தாலே போதும் உயர்ந்திடலாம். அந்தக் குறள் உங்களுக்கு ரொம்பவே தெரிஞ்ச குறள் தான்.
“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு” --- குறள் 595; அதிகாரம் – ஊக்கம் உடைமை
நம்மாளு அதை எப்படி உயர்த்தறதுன்னு உட்கார்ந்துட்டார். வள்ளுவரும் கிளம்பிட்டார்.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments