07/04/2023 (764)
அமைச்சு அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களின் மூலம் அமைச்சரது குணங்களைக் கூறினார். ஆறாவது பாடலின் மூலம் அவரின் சிறப்பு கூறினார். அதாவது நுட்ப மதியோடு ஆய்ந்து அறிந்த கல்வி கேள்விகளால் உயர்ந்து நிற்கும் அமைச்சரை எதிர்க்க எதனாலே முடியும் என்று ஒரு கேள்வி எழுப்பி அது நடக்க வாய்ப்பில்லை என்பதைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்துதான் நாம் உணர்வா, அறிவா என்ற ஆராய்ச்சிக்குள் போனோம்.
அடுத்து வரும் இரு பாடல்களின் மூலம் அமைச்சரது செயல்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று சொல்கிறார்.
அதாவது, என்னதான் நுண்ணிய நூல் பல கற்றாலும், உலகத்து இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார்.
நாம் ஏற்கனவே புல்லறிவான்மை அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 14/02/2021 (28). மீள்பார்வைக்காக:
“உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்” --- குறள் 850; அதிகாரம் – புல்லறிவான்மை
அலகையா = பேய் போல(அச்சமூட்டூம் வகையிலே இருப்பதனால் இந்த உவமை) (‘பேய்’ ன்னு சொன்னா அவனுக்கும் கால் இருக்குதேன்னு கேட்கப்படாது!)
உலக இயற்கையை ஒட்டித்தான் நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். உலகம் உருண்டை என்று சொன்ன அறிஞரை நம்மாளுங்க உருட்டுன உருட்டு இருக்கே அது அறியாமையின் உச்சம்!
காலத்திற்கு ஏற்றார் போல் நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
சட்டைப் போடாத ஊரில் சட்டை போடுபவன் முட்டாள்! அவனுடன் போராடுவதை விட்டுவிட்டு, அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில், அவனுக்கு ஒரு கதையைத் தயார் செய்யது அவனையே பேச வைக்கணும்! இது உங்களுக்கு எப்படியென்று தெரிய வேண்டுமென்றால் நவீன அரசியல்வாதிகளைப் பார்த்து கற்க!
சரி நாம் குறளுக்கு வருவோம்.
“செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.” --- குறள் 637; அதிகாரம் – அமைச்சு
செயற்கை யறிந்தக் கடைத்தும் = நுண்ணிய நூல்களின் துணையோடும் மேலும் அனுபவங்களின் அடிப்படையிலும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தாலும்;
உலகத்து இயற்கை அறிந்து செயல் = உலக நடையோடு ஒட்டி செயல்களை அமைக்கணும்.
நுண்ணிய நூல்களின் துணையோடும் மேலும் பல அனுபவங்களின் அடிப்படையிலும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிந்திருந்தாலும், வெற்றி பெற வேண்டுமென்றால் உலக நடையோடு ஒட்டி செயல்களை அமைக்கணும்.
நாம் இப்போது சிந்தித்துக் கொண்டிருப்பது பொருட்பாலில் அரசியலுக்குத் தேவையான அங்கங்களைக் குறித்த அங்கவியல் எனும் பகுதி என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comentarios