மயக்கமில்லாமல் அடக்கமிருந்தால்அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்!
ஒரு திரை இசை பாடல். 1972ல் வந்த ‘யார் ஜம்புலிங்கம்’ என்ற படத்தில் கவிஞர் வாலி எழுதி, தமிழிசைச் சித்தர் C S ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல். அப்போதெல்லாம், வருடா வருடம், காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்கு தமிழிசைச் சித்தர் வருவதுண்டு. அவர் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காலமும் உண்டு. இது நிற்க.
இதோ அந்தப் பாடல்:
“நல்லவன் கையில் நாணயமிருந்தால் நாலுபேருக்கு சாதகம் - அது பொல்லாதவனின் பையிலிருந்தால் எல்லா உயிர்க்கும் பாதகம் இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி இருந்தும் இறவாதிருக்கின்றான் பணத்திமிர் கொண்ட மனிதன் நிமிர்ந்திருந்தாலும் நடைபிணமாக நடக்கின்றான் லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம் எச்சிலைபோல பறக்குமடா அச்சடித்திருக்கும் காகிதப்பெருமை ஆண்டவனார்க்கும் இல்லையடா ஓடும் உருளும் ஓடும் உருளும் உலகம் தன்னில் தேடும் பொருளும் தேவைதான் தேடும் பொருளும் தேவைதான் அதில் மயக்கமில்லாமல் அடக்கமிருந்தால் அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் “
https://www.youtube.com/watch?v=ZWzKIWdfbto (சொடுக்கிக் கேளுங்கள்)
ஓஓ…, அதிலேயே, ஆழ்ந்து விட்டேன். மன்னிக்க. இதோ குறள் 437. இதை விரித்துத்தான் கவிஞர் வாலி எழுதியிருப்பாரோ?
“செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது இன்றிக் கெடும்.” --- குறள் 437; அதிகாரம் – குற்றங்கடிதல்
செயற்பால = செய்ய வேண்டியவைகளை; செய்யாது = செய்யாத; இவறியான் = கஞ்சனின்; (இவறல் = தேவைக்கு உதவாதது); செல்வம் = பொருள்; உயற்பாலது =உய்விக்கும், (துன்பத்திலிருந்து) விடுவிக்கும் சிறந்த பயன்; இன்றிக் கெடும் = இன்றி அழியும்
தன்னிடமுள்ள பொருளைக்கொண்டு, செய்ய வேண்டியவைகளை செய்யாத கஞ்சனின் செல்வம் சிறந்த பயன் ஏதுமின்றி அழியும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments