24/01/2021 (7)
100, 200…
நேற்றைய தினம், 100 வது குறளில் சொல்லில் இனிமை வேண்டும் என்று வலியுறுத்திய திருவள்ளுவப் பெருந்தகை, பயனை எங்கே வைத்தார் என்ற வினாவோடு பிரிந்தோம்.
திருவள்ளுவப் பெருந்தகை, ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் அதை நேர் முகமாகவும், எதிர்மறையாகவும் வலியுறுத்துவதை நாம் காண்கிறோம். (திருக்குறளின் அமைப்பு முறை இனிமையானது – பிறிதொரு சமயம் பேசுவோம்)
இனிமையாக மட்டும் பேசினால் போதாது, அதற்கு வலிமை, அதாவது பயன் வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என தொல்காப்பியம் சுட்டுகிறது.
சொல்லில் பயனுள்ள சொல்லை மட்டுமே சொல்ல வேண்டும். பயனில் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு குறளில் ஆணித்தரமாக இடித்து கூறுகிறார். அந்த குறள் தான் 200 வது குறள்.
“சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்”--- குறள் 200; அதிகாரம் - பயனில சொல்லாமை
சொல்லில் இனிமையும், வலிமையும் இருந்தால் மட்டும் போதுமா? அதிலே உண்மையும் இருக்கவேண்டாமா? அதில் தீமை ஒளிந்திருக்கக் கூடாதல்லவா?
“உள்ளத்தில்உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” –என்கிறார் மகாகவி பாரதியார்
அக்கருத்தை எங்கே ஒளித்து வைத்துள்ளார் நமது திருவள்ளுவப் பெருந்தகை? மீண்டும் தேடுவோம். உங்களின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்!
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
تعليقات