20/02/2022 (359)
அவன் தொடர்கிறான் தோழியிடம்:
நிறைய வளையல்களை அணிந்துள்ள என்னவள், இல்லாத ஒன்றை, அதாவது நான் மறுபடியும் பிரிந்து விடுவேனோ? அது நடந்து விடுமோ என்று, நினைந்து அச்சம் கொள்கிறாள்.
அதனால், என்னிடமிருந்து மறைந்திருக்கிறாள் என்ற குறிப்பு எனக்குத் தெரிகிறது. அதனால், எனக்கு ஏற்பட்டுள்ளத் துன்பத்தை அவள் அறிவாளா?
அதனைப் போக்கும் மருந்தையும் அல்லவா அவள் மறைத்திருக்கிறாள். இதனை நீ எடுத்துச் சொல்வாயா?
“செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.” --- குறள் 1275; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
செறிதொடி = நிறைய வளையல்களை அணிந்தவள்; கள்ளம் = மறைந்து இருப்பது; செய்து இறந்த கள்ளம் = இல்லாத ஒன்றினை நினைந்து மறைந்து இருப்பது; உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து = எனது துயரத்தைப் போக்கும் மருந்தையும் அல்லவா அவள் மறைத்திருக்கிறாள்.
சரி, பாவம் அவன் என்று தோழி சென்று ‘அவளி’டம் செய்திகளைத் தெரிவிக்கிறாள்.
அதற்கு ‘அவள்’ பதில் சொல்லுவது போல அடுத்த குறள் 1276:
உனக்குத்தான் தெரியுமே, அவர் அப்படித்தான் வருந்துவார். விருந்து முடிந்ததும் விடுவார் நடையை! அவரின் கெஞ்சல்களில் இருக்கும் குறிப்பு எனக்குத் தெரியாதா என்ன? ஏதோ ஒரு காரணம் இருக்கும் மீண்டும் பிரிய!
“பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.” --- குறள் 1276; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
பெரிது ஆற்றி = மிகவும் ஆறுதலைத் தந்து; பெட்ப = மகிழ; கலத்தல் = கூடுவது; அன்பின்மை அரிது ஆற்றி = (அவர்) அன்பில்லாத அந்தப் பிரிவினை சில போது செய்தாலும்கூட; சூழ்வது உடைத்து = அந்த நினைவுகள்தான், அந்த குறிப்புகள்தான் என்னை வந்து சூழ்கின்றன.
இந்த வளைகளை அவர் மெச்சுவதாகச் சொல்கிறாய். அதற்கு ஏற்படும் நிலை, அது காட்டும் குறிப்பு உனக்குத் தெரியாதா?
தோழி: மௌனம்…
நம்மாளு: வளையலுக்கு என்ன ஆச்சு?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments