15/04/2021 (88)
இல்லறதானுக்கு இரண்டு அம்மா!
அமிழ்து, அமிழ்து, அமிழ்து … என்று தொடர்ந்து கூற தமிழ் என்றே ஒலிக்கும்.
அமிழ் = அம் + இழ்; அம் என்றால் அழகு, இனிது. இழ் என்றால் மலர்தல். அமிழ் என்றால் அழகாக மலர்தல். அமிழ்து என்றால் அழகிலே, இனிமையிலே ஆழ்ந்து இருப்பது. அழகுடைத்து, இனிமையுடைத்து என்று பொருள்படும்.
அம்மா என்றால் மிக அழகானவள் என்று பொருள். பல தாய்கள் இருக்கலாம். உதாரணமாக செவிலித்தாய், வாடகைத்தாய், வளர்ப்புத்தாய்…; ஆனால் அம்மா என்றாலே தனி தான். அம்மான்னா சும்மாவா! அவள் ஒருவள் தானா? நிற்க.
அமிழ்து அழகாக சுருங்கி அமுது ஆனது.
“அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு …” கவிஞர் புலமைப்பித்தன், படம் - கோயில்புறா
“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் …” பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் = தம் + இழ்; தம்மில் இருந்து இயல்பாக மலர்தலால் தமிழ். இயல்பான ஒலிப்பு மொழி என்றே பொருள் கொள்கிறார்கள் மொழியியல் அறிஞர்கள்.
அமிர்தம் அன்ற சொல் ‘அம்ருட்’ என்ற பிற மொழி சொல்லில் இருந்து வருவது. ம்ருட் என்றால் மறைதல், சாதல். அ+ம்ருட் என்றால் ‘சாகா’. அமிர்தம் என்றால் உயிர் காக்கும் பொருள். நிற்க.
மீண்டும் அம்மா. ஆமாம் காதலி அம்மா ஆகிறாள். யாருக்கு?
நாம சுயமாக பொருள் ஈட்டி அதை சுற்றத்தோடு பகிர்ந்து உண்டால் மகிழ்ச்சி பல மடங்காகும். அதுக்குதான் பல நிகழ்வுகளில் விருந்து ஏற்பாடு. பலரும் உண்டு மகிழ்வதை பார்ப்பதில் மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யுது!
அது போல மகிழ்ச்சி பல மடங்கு இருக்குமாம் தனது காதலியைத் தழுவும் போது! நான் சொல்லலை. நம்ம வள்ளுவப்பெருமான் சொல்கிறார். அந்த இடத்திலேயே மனைவியை அம்மா ஆக்கிவிடுகிறார்! இதோ அந்தக் குறள்:
“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.” --- குறள் 1107; அதிகாரம் - புணர்ச்சி மகிழ்தல்
தம்மில் இருந்து = தமது முயற்சியால்; தமதுபாத்து = தமது பங்கு, விருந்து; உண்டு = சுற்றம் உண்பதை கண்டு மகிழ்வது; அற்றால் = அத்தன்மையது; அம்மா அரிவை = அழகு மிக்க பெண்ணை; முயக்கு = தழுவுதல்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments