19/04/2023 (776)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அதிகாரம் 65 இல், ‘சொல்வன்மை’ முக்கியம் என்றவர், அதனைச் செயல்களால் செய்து காட்டவேண்டும் என்பதால், அதனைத் தொடர்ந்து ‘வினைத்தூய்மை’ என்ற அதிகாரத்தை வைத்தார்.
வினைத்தூய்மை அதிகாரத்தில், செயல்கள்தாம் அறம், பொருள், இன்பம் மற்றும் புகழையும் கொடுக்கும் என்று வலியுறுத்திச் சொல்கிறார்.
எல்லாச் செயல்களுக்கும் முதல் காரணம் என்றும் துணைக்காரணம் என்றும் இருக்கும். முதல் காரணம் என்பதுதான் அந்தச் செயலை முடித்து வைக்கும். துணைக் காரணங்கள் அதற்கு உதவிபுரியும்.
பரிசுச் சீட்டு (Lottery ticket) வாங்குவது முதல் காரணம். அப்போதுதான் ஆண்டவனால்கூட உதவ முடியும். அதாவது, உதவி என்பது துணைக்காரணம்.
உழைக்க ஆரம்பித்தால்தான் உதவிகள் கிடைக்கும். உதவிகளால் உயர்வு கிடைக்கும்.
ஆகையால், செயல்களைச் செய்ய ஆரம்பித்து முடியும்வரை தொடர்ந்து செய்வது என்பது, உதவிகளுக்கும் வழி வகுத்து, வேண்டிய எல்லாம் தரும் என்கிறார் நம் பேராசான்.
“துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.” --- குறள் 651; அதிகாரம் – வினைத்தூய்மை
ஆக்கம் = உயர்வு, முன்னேற்றம், செல்வம்; வினைநலம் = வினைத் தூய்மை, செயலில் தெளிவு
துணைநலம் ஆக்கம் தரும் = நல்ல சுற்றம், நட்பு, ஏனையத் துணைகள் உயர்வுக்கு வழி வகுக்கும்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் = செயலைத் துணிந்து செய்வது என்பது வேண்டியன எல்லாம் தரும்.
நல்ல சுற்றம், நட்பு, ஏனையத் துணைகள் உயர்வுக்கு வழி வகுக்கும்; ஆனால், அந்தத் துணைகளையும் பெற நாம் செயலைத் துவங்க வேண்டும். எனவே, செயலைத் துணிந்து செய்வது என்பது வேண்டியன எல்லாம் தரும்.
“வேண்டியன எல்லாம்” என்றால் அறம், பொருள், இன்பம் மற்றும் புகழ் (வீடு) அனைத்தும் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆகையால் மானுடரே நல்லச் செயல்களைச் செய்வீர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments