16/12/2022 (652)
ஆசிரியர் நமக்கு ஏற்கனவே சொல்லியிருக்கார். ‘கோடு’ என்றால் ‘வளைந்த’ என்று பொருள் என்று.
மேலும், வளையாத கோடு என்பது நேர்கோடு. குன்றுகளும், மலைகளும் பார்வைக்கு கீழ் நோக்கி வளைந்திருக்கும். அதாவது, மேல் நோக்கி குவிந்திருக்கும். Convex என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அதான் அது.
மேட்டு நிலங்களை, பண்டை வழக்கத்தில், ‘கோடு’ என்ற அடைமொழியோடு பயன்படுத்தினார்கள். அதனால்தான், கொல்லங்கோடு, திருவிதாங்கோடு என்ற பெயர்கள்.
மேலும், ‘கோடு’ பற்றித் தொடர்ந்தார் ஆசிரியர். கோடு என்றால் adjust பன்ணிக் கொள்வது; compromise செய்து கொள்வது என்ற பொருளும் இருக்காம். அதாவது, சுய லாபத்திற்காக விட்டுக் கொடுப்பது; தங்களின் தரத்தை தாங்களே குறைத்துக் கொள்வது, தலைமையைக் காட்டிக் கொடுப்பது முதலியன.
எப்படியெல்லாம் “கோடுவார்கள்” என்று நம் பேராசான் சொல்லியிருந்தது உங்களுக்கு கவனம் இருக்கலாம். மீள்பார்வைக்காக காண்க 11/12/2022.
அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.” --- குறள் 513; அதிகாரம் – தெரிந்து வினையாடல்
அன்பு, அறிவு, தெளிவு, தவறான ஆசைகள் இல்லாமல் இருத்தல் முதலிய நான்கு பண்புகளும் தொடர்கிறதா என்று அறிந்து அவர்களை அப்பணியில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
“கோடாமை” என்றால் எந்த விதமான நெருக்கடிகள் வந்தாலும் வளைந்து கொடுக்காத தன்மை, நெஞ்சுறுதியோடு நிற்கும் வலிமை
“...கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைய நாக்கு
கோடாமை கோடி பெறும்.” --- நான்கு கோடி பாடல்; ஔவை பெருந்தகை
நாக்கு கோடாமை என்றால் சில சலுகைகளைக்காக மாற்றி பேசாமல் இருப்பது. அதாவது, காசுக்கு கூவாமல் இருப்பது என்றார் ஔவை பெருந்தகை.
சரி, இன்றைக்கு என்ன ஒரே கோடாக போயிட்டு இருக்கே என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறேன்.
நம் பேராசான், யாரிடம், எப்படியெல்லாம் வினையாடல் செய்யவேண்டும் என்று தெரிந்து வினையாடலில் சொல்லிக்கொண்டே வந்தார். இப்போது, முடிவுரையாக ஒன்று சொல்ல வேண்டும்.
அதைத்தான், இப்போது சொல்லப் போகிறார். இது வரை சொன்னதெல்லாம் உங்களுக்கு மறந்தாலும் இப்போது சொல்வதைக் கொஞ்சம் கவனமாக கேளுங்க. கிட்ட வாங்க; காதை நல்லாத் தீட்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு சொல்கிறார்:
ஓருத்தன் அறிவில் (knowledge) பெரியவனாக இருக்கலாம்; ஆற்றலில்(skill) புலியாக இருக்கலாம். இருப்பினும் attitude, அதாவது, அவனின் அணுகுமுறை, மனப்போக்கு நேராக இல்லாமல் வளைந்து இருக்குமானால், அதாவது ‘கோடி’ இருக்குமானால், அவன் வேலைக்கு ஆகமாட்டான்.
Attitude, attitude ... அதுதான் ரொம்ப முக்கியம். அறிவும், ஆற்றலும் கற்றுக் கொடுக்க முடியும்! இதைத்தான் இப்போது அனைத்து நிறுவனங்களின் (Human resources officers (மனித வள அதிகாரிகள்) பார்க்கிறார்கள்.
(marks for knowledge + marks for skill) * marks for attitude = selection score
இதை மேலும் விரித்தால் விரியும். பிறகு பார்க்கலாம்.
வேலை செய்பவர்கள் ‘கோடாமை’யோடு இருக்க வேண்டும். இதைத்தான் நாள்தோறும் தலைமை கவனித்து வேலையைக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த உலகமே நேராகச் செல்லும் என்கிறார்.
“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.” --- குறள் 520; அதிகாரம் – தெரிந்து வினையாடல்
வினைசெய்வான் கோடாமை = பணியாற்றுபவர்களின் உறுதி, விட்டுக் கொடுக்காத தன்மை; மன்னன் நாடோறும் நாடுக = தலைவன் நாள் தோறும் நாட வேண்டும்; கோடாது உலகு = (அப்போது), இந்த உலகமும் நேர் வழியில் செல்லும்.
பணியாற்றுபவர்களின் உறுதி, விட்டுக் கொடுக்காத தன்மையை, தலைமை நாள் தோறும் நாட வேண்டும்; அப்படிச்செய்தால், இந்த உலகமும் நேர் வழியில் செல்லும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments