23/02/2022 (362)
நாம் குறிப்பு அறிவுறுத்தலுக்கு வருவோம். தோழியிடம் ‘அவள்’ தன் வளையின் குறிப்பினைக் கூறினாள். மேலும், எனக்குத் தெரியும் அவர் பிரிவது உறுதி.
எனது மனது சலனப் படுகிறது. ஒரு நாள் பிரிந்தாலே ஏழு நாள் போல் தோன்றுகிறது. அதுவும், நேற்றே நடந்து விட்டதாகக் காண்கின்றேன்.
மனம் செய்யும் மாற்றங்கள் தான் ‘பசலை’ என்று சொல்கிறார்கள். அது என்னை இப்போதே பிடித்துக் கொண்டது.
“நெருநற்றுச் சென்றார் எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.” --- குறள் 1278; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
நெருநல் = நேற்று; நெருநற்றுச் சென்றார் எம் காதலர் = நேற்று சென்றார் எம் காதலர்; யாமும் எழுநாளேம் மேனி பசந்து = எனக்கு, ஏழு நாட்கள் பிரிந்தது போல என் உடலில் மாற்றங்களைக் காண்கின்றேன்.
இப்படி, காதலன் அருகில் இருக்கும் போதே, கற்பனையில் நேற்றே பிரிந்து விட்டது போலவும், அதனால் அவளுக்கு உடலில் மாறுதல்கள் ஏற்படுவது போலவும் உணர்வதை தோழியிடம் சொல்கிறாள்.
சொன்னது மட்டுமல்லாமல், தனது கழண்டு விழும் வளைகளையும், மெலிந்த தோள்களையும் பார்க்கிறாள். அது மட்டும் அல்லாமல், இது இரண்டும் நிகழாது அவரிடம் எடுத்துச் சொல்லி, என்னைத் தேற்றுவாயா என்பது போல் தோழியின் அடிகளை நோக்குகிறாள்.
இன்னுமா, நீ கிளம்பலை என்று ‘அவள்’ சொல்வதை உணர்ந்த அத் தோழி, உடனே அதை ‘அவனுக்குத் தெரிவிக்கிறாள்.
தோழி, அவனுக்குச் சொன்னது:
“தொடிநோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃதாண்டு அவள்செய்தது” --- குறள் 1279; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
தொடி நோக்கி = வளையல்களைப் பார்த்து; மென் தோளும் நோக்கி = மெலிகின்ற தன் தோள்களையும் நோக்கி, அடி நோக்கி = இவ்விரண்டும் நிகழா வண்ணம் காக்க வேண்டும் என தன் அடியை நோக்கி; அஃதாண்டு அவள் செய்தது = அவ்வளவுதான் அவள் செய்தாள்.
இந்த குறிப்புகளைத் தோழி அவனிடம் சொல்ல ‘அவன்’ ங்கே என்று விழிக்கிறான். கடைசிக் குறளுக்கு வந்து விட்டோம். என்ன சொல்லப் போகிறார் நம் பேராசான்?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments