தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், அதன் இருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அதனால், அதன் விலை மாறிக் கொண்டும் ஏறிக் கொண்டும் இருக்கிறது.
இந்த மூலப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் தொழிற்சாலைகளில் ஒரு நிலையில்லாத் தன்மை ஏற்படுகிறது. அதாவது, அடுத்த மாதம் இன்ன விலையில் இந்தப் பொருட்களை செய்து தருகிறேன் என்று கொடுத்த வாக்குறுதிகளின் நிலை, மூலப் பொருட்களின் விலை மாற்றங்களால், கேள்விக் குறியாகிறது. இதற்கு ஒரு வழியை கண்டு பிடித்தார்கள். அதாவது, மூலப் பொருட்களை வழங்கும் நிறுனவங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு விடுவதுதான் அது. விலை ஏறினாலும், இறங்கினாலும் எங்களுக்கு ஒரே விலையில் தர வேண்டும் என்பதுதான் அது. அதற்கு ஆங்கிலத்தில் ப்யூச்சர்ஸ் ஒப்பந்தம் (futures contract) என்கிறார்கள். அந்த ப்யூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் பல்வேறு மூலப்பொருட்களுக்கு விரிவு செய்யப்பட்டு பங்குச் சந்தை என்கிறோமே stock market ல் தினம் தோறும் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளது. இதனால் ஊக வாணிகம் (speculation) தலை தூக்குகிறது. அதனால், அது ஒரு சூதாட்டம் (gambling)போல அதன் ஆட்டம் தலை விரித்தாடுகிறது.
சரி, இந்த வியாக்கியானம் எதற்கு என்கிறீர்களா? இப்போ சொல்லப்போகிற செய்தி உங்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் கூட இருக்கலாம். கடந்த டிசம்பர் மாதத்தில் (Dec. 2020) இருந்து தண்ணீர் கூட ப்யூச்சர்ஸ் சந்தையில் விற்பனைக்கு வந்து விட்டது நம்ம அமெரிக்காவில்! (இந்தியாவிற்குள் நுழையும் நாள் வெகு தொலவில் இல்லை.) நாம் பயன் படுத்துகிற பொருட்களின் விலையை எப்படி ஊக வணிகர்கள் நிர்ணயிக்கிறார்களோ அதைப்போல நாம் குடிக்கும் தண்ணீரின் விலையையும் அவர்கள் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!
திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இந்தச் செய்தியையும் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.
சரி, நாம வான் சிறப்பு அதிகாரத்தின் கடைசி குறளுக்கு வந்து விட்டோம். நம்ம பேராசான் எப்படி முடிவுரை எழுதுகிறார் என்று பார்க்கலாம்.
நீரின் சிறப்புகளை முதல் ஏழு குறள்கள் மூலம் சொன்ன நம் பேராசான், அடுத்த இரண்டு குறள்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய எல்லா அறங்களுக்கும் நீர்தான் அடிப்படை என்பதையும் எடுத்துச் சொன்னார். கடைசியா, ஒரு பன்ச் டையலாக் (punch dialogue) என்கிறார்களே அது போல ஒரு குறள்:
“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையா தொழுக்கு.” --- குறள் 20; அதிகாரம் – வான் சிறப்பு
நீர் இல்லை என்றால் எப்படிப்பட்டவனுக்கும் இந்த உலகத்திலே ‘வாய்ப்பு இல்லை ராசா’; அந்த நீர் வேண்டும் என்றால் மழை இல்லாம கிடைக்காது ராசா - என்கிறார்.
(சுத்தத் தமிழ் ஆசிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக.)
இந்தக் குறளிலும் பல நுட்பங்களை எனது ஆசிரியர் தெரிவித்தார். என்ன பண்ண எனக்கு எட்டியதை மட்டும் எழுதிட்டேன். முயலுவேன் முழுமையாகச் சொல்ல!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Very True. Reminds me of Andal;s Thiruppavai Pasuram 4 " Alimalaikkkanna "