ஒரு மொழியினை கற்க வேண்டுமா?
மொழியினை படிக்கும் முறை என்று ஒன்று இருக்காம். முதிலிலே நிகண்டு படிக்கனுமாம். அதாங்க, டிக்ஷனரி (dictionary) ன்னு தமிழிலே சொல்வாங்க அது! அகராதின்னு கூட சிலர் சொல்லுவாங்க!
நிகர்+அண்டு = நிகண்டு; நிகரான சொற்கள் அண்டிக்கிடப்பவை. தமிழிலே மிகப் பழமையான நிகண்டு என கிடைத்திருப்பது ‘திவாகர நிகண்டு’. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வந்ததாம்.
அப்போதெல்லாம், சிறு பிள்ளைகள் ஏழு எட்டு வயதிலேயே நிகண்டுகளை நெட்டுரு பண்ணிடுவாங்களாம். இப்போது, நம் பிள்ளைகள் நெட்டிலேதான் (internet) பின்றாங்க!
நிகண்டுக்குப் பிறகு தர்க்கம் (logic) படிக்கனுமாம். இதை அளவையியல்ன்னும் சொல்றாங்க. ஒரு பொருளைப் பற்றி சரியான ஒரு முடிவுக்குவர உதவுமாம்.
தர்க்க நூல்களுக்குப் பிறகு இலக்கணம் படிக்கனுமாம். இது எதற்கு என்றால் ஒரு மொழி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை அறிய உதவுமாம்.
அதற்குப் பிறகுதான் மற்ற நூல்களை கற்க வேண்டுமாம்! அகராதி, தர்க்கம், இலக்கணம், இலக்கியம் … அப்பப்பா முடியலைடா சாமி.
ஆளைவிடு தம்பி. இதெல்லாம் சரிப்படுமா?ன்னு கேட்கறீங்க. அதற்குதான் ஒரு short-cut (குறுக்கு வழி) இருக்காம். அதுவும் தமிழிலேதான் இருக்காம். தமிழிலே உள்ள ஒரு நூலை சரியாகக் கற்றால் அனைத்து நூற்களையும் கற்றது போலவாம்.
ஆமாங்க. சரியா கண்டுபிடிச்சுட்டீங்க. அது நம்ம திருக்குறள்தான். இதைக் கற்றால் நிகண்டு தொடங்கி நிர்வாகவியல் வரை அனைத்தும் அறியலாம்.
அது எப்படின்னு கேட்டீர்கள் என்றால் அது காலம், இடம், மொழி, வளர்ச்சி ஆகியவைகளைக் கடந்து, தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக இருந்து வருகிறது. அப்போ, அதிலே ஒரு சிறப்பு இருக்கா இல்லையா? அதை இயற்றியவர் பேராசான் இல்லையா? அவர் ஒரு நிறை மொழி மாந்தர்!
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.” --- குறள் 28; அதிகாரம் – நீத்தார் பெருமை
நிறைமொழி மாந்தர் பெருமை = நிறைந்த மொழியை உடைய துறந்தாரது பெருமைக்கு; நிலத்து மறைமொழி காட்டி விடும் = இவ் உலகத்தில் அவர்கள் சொல்லிச் சென்றவைகளே கண்கூடாகக் காட்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments