top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

பகச்சொல்லி ... 187, 188, 494, 209

16/11/2023 (985)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

புறம் பேசுபவர்களின் நெஞ்சங்களில் அறம் இருக்காது என்றார். அஃதாவது, அறவழியில் நடப்பவர்கள் புறம் பேசமாட்டார்கள் என்றவாறு.

 

அவ்வாறு புறம் பேசுபவர்களைப் பார்த்து நம் பேராசன் இரக்கப்பட்டு அவர்களைத் திருத்திக் கொள்ள ஒரு எளிய வழியைச் சொல்லியிருக்கிறார். அந்தக் குறளை நாம் முன்னர்ப் பார்த்துள்ளோம். காண்க 24/09/2021 (213).

 

அஃதாவது, நம் சுற்றத்திடை நன்றாகச் சிரித்துப் பேசி, அவர்களை உயர்த்தும் பொருட்டு ஊக்குவித்துப் பேசப் பழகினால் போதும் என்கிறார். அவ்வாறு பேசத் தெரியாதவர்கள்தாம், புறம் பேசுகிறார்கள் என்கிறார்.

 

ஒன்றை விலக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் வேறு ஒன்றை வைக்க வேண்டும். வெற்றிடம் என்றும் நிலைக்காது. இது இயற்கை. எனவே சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருங்கள். அனைவரையும் மகிழ்சிக்கு உள்ளாக்குங்கள். இருட்டை விலக்க ஒரு விளக்கு. அவ்வளவே.

 

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.” --- குறள் 187; அதிகாரம் – புறங்கூறாமை

 

கூடி மகிழுமாறு பேசி நட்பினை வளர்க்கத் தெரியாதவர்கள்தாம் நட்பினில் பிளவு ஏற்படும்படி புறங்கூறுபவர்.


மேற்கண்டக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 24/09/2021.

மீண்டும் தொடர்கிறார் மிகுந்த இரக்கத்தோடு!


அஃதாவது, சுற்றியிருப்பவர்களையே இவ்வாறு தூற்றினால் வெளிவட்டத்தில் இருப்பவர்களை எப்படியெல்லாம் தூற்றுவீர்கள் என்கிறார். முதலில் ஊரில் உள்ளவர்களைக் குறை சொல்கிறேன் என்று ஆரம்பிக்கும். அதுவே பழக்கமாகி வழக்கமாகவும் ஆகி உடனிருப்பவரையும் குறை காணும் ஒரு நிலைக்கு வளர்ந்துவிடும்.


ஒரு விரலைச் சுட்டினால் மூன்று விரல்கள் நம்மை நோக்கி இருக்கும். எனவே தூற்றிப் பழகாதீர்கள் என்கிறார்.


துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.” --- குறள் 188; அதிகாரம் – புறங்கூறாமை


துன்னியார் = உடனிருப்பவர், துணை நிற்பவர்; துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் =  உடனிருப்பவர்களின் செயல்களையே நியாமற்றுத் தூற்றிக் கொண்டிருப்பவர்கள்; என்னைகொல் ஏதிலார் மாட்டு = வெளிவட்டத்தில் இருப்பவர்களை எப்படியெல்லாம் தூற்றியிருப்பார்கள் என்பதைக் கற்பனைக்கூடச் செய்ய முடியாது.

என்னைகொல் = என்னத்த சொல்றது? ஏதிலார் = அயலார்; மாட்டு = இடம்.


உடனிருப்பவர்களின் செயல்களையே நியாமற்றுத் தூற்றிக் கொண்டிருப்பவர்கள், வெளிவட்டத்தில் இருப்பவர்களை எப்படியெல்லாம் தூற்றியிருப்பார்கள் என்பதைக் கற்பனைக்கூடச் செய்ய முடியாது.


துன்னியார் என்றால் நம்முடன் நெருங்கி நிற்பவர், நண்பர், உடனிருப்பவர், தலைவர்,  அரசர், காதலர், உறவினர் என்றெல்லாம் பொருள்படும்.

“துன்” என்றால் நெருங்கு என்று பொருள். நன்பரை துன்றுநர் என்றும் அழைக்கலாம். துன்னாதார் என்றால் பகைவர்.


துன்னியார் என்றச் சொல்லை நம் பேராசான் இரண்டு குறள்களில் பயன்படுத்தியுள்ளார். இடனறிதல் என்ற அதிகாரத்தில் நாம் பார்த்தக் குறள் காண்க 24/11/2022 (630). மீள்பார்வைக்காக:


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.” --- குறள் 494; அதிகாரம் – இடனறிதல்


நம்மைத் தாக்க வேண்டும் என்று வந்து கொண்டிருந்த மாற்றார் தங்கள் எண்ணத்தைக் கைவிடுவர். எப்போது என்றால், அவர்களைத் தாக்கத் தக்க இடத்தை அறிந்து செயல்படும் தலைவர் இன்னும் நெருங்கி முற்றுகையிட்டால்!


துன்னி = நெருங்கி.


தீவினைபால் துன்னற்க என்கிறார். அஃதாவது, தீயச் செயல்களைச் செய்ய நெருங்காதீர்கள் என்கிறார் தீவினையச்சம் என்னும் அதிகாரத்தில்.

நம்மை நாமே விரும்பினால் எந்தவொரு தீயச் செயல்களையும் பிறர்க்குச் செய்ய நெருங்காதீர்கள். மற்றவர்க்குச் செய்தால் நமக்கு அதன் பாதிப்பு தானே வரும் என்கிறார்.


தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்

துன்னற்க தீவினைப் பால்.” --- குறள் 209; அதிகாரம் – தீவினை அச்சம்


தன்னைத்தான் காதலன் ஆயின் = நம்மை நாமே விரும்பினால்; எனைத்தொன்றும் = எந்தவொரு; தீவினைப் பால் துன்னற்க = தீயச் செயல்களையும் பிறர்க்குச் செய்ய நெருங்காதீர்கள்.


நம்மை நாமே விரும்பினால், எந்தவொரு தீயச் செயல்களையும் பிறர்க்குச் செய்ய நெருங்காதீர்கள்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page