18/12/2022 (654)
சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் குறளில் சுற்றத்தின் இலக்கணத்தைச் சொல்கிறார் நம் பேராசான்.
சுற்றம் என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் தருகிறார்.
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை”, “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்றெல்லாம் பழமொழிகள் இருக்கின்றன.
சரி, அது என்ன பொறை? ‘பொறை’ என்றால் பொறுத்துப் போதல்! பொறை என்றால் பாரம் தாங்கும் கல் என்றும் பொருள். அரசர்களை “பெரும்பொறை” என்றும் விளிக்கிறார்கள். மக்களின் பாரத்தை தாங்குவதால் அவன் பெரும்பொறை!
அதாவது, விட்டுக் கொடுத்துப் போவது. அதாங்க adjust பண்ணி போவது. இதுதான் சுற்றத்திற்கு முக்கியம்.
விட்டுக் கொடுப்பது – இது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி: அவர்கள் செய்யும் செயல்களில் சில தவறுகளாகத் தெரிந்தாலும் விட்டுக் கொடுப்பது. இரண்டாம் பகுதி: அதற்கு மேலும் உதவுவது.
நியாங்கள் எப்போதும் ஒரு பக்கம் மட்டுமே இருப்பதில்லை! மறுபக்க நியாங்களை மறுக்காதீர்கள். இந்தப் பண்பு யாரிடம் இருக்கிறதோ இல்லையோ சுற்றத்திடம் இருக்க வேண்டும் என்கிறார்.
அதற்காக, சுற்றம் செய்யும் அநியாயங்களைத் தடுக்க வேண்டாம் என்ற பொருளும் அல்ல!
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
ஒருவன் செல்வத்தைத் தொலத்துவிட்டு நின்றாலும் அவனையும் அரவணைத்துச் செல்வது சுற்றத்திடம் உண்டு என்கிறார்.
மிகவும் ஆழமானக் கருத்து.
“பற்றற்ற கண்ணும் பழமைப் பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.” --- குறள் 521; அதிகாரம் – சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழமைப் பாராட்டுதல் = ஒருவன் செல்வத்தைத் தொலத்துவிட்டு வறியவன் ஆனாலும் அவனின் பழைய நல்ல செயல்களை எடுத்துப் பாராட்டுவது; சுற்றத்தார் கண்ணே உள = சுற்றத்தார்களிடம் உண்டு.
ஒருவன் செல்வத்தைத் தொலத்துவிட்டு வறியவன் ஆனாலும் அவனின் பழைய நல்ல செயல்களை எடுத்துப் பாராட்டுவது சுற்றத்தார்களிடம் உண்டு.
செந்தமிழ் காவலர் சி. இலக்குவனார் போன்ற பெரும் அறிஞர் பெருமக்கள், ‘பற்று அற்ற’ என்பதற்கு நம் மீது ‘அன்பு அற்ற’ என்ற பொருளையும் எடுக்கிறார்கள்.
நீ நல்லவன் இல்லையா, அதனாலே இதைச் செய்வாய் என்று தேன் தடவி மருந்து தருகிறார் தலைமைக்கு. சுற்றத்தை விட்டுக் கொடுக்காதே என்கிறார் நம் பேராசான்.
தலைமைகள், மாற்றார்களைவிட அதிகமான கோபத்தை தன்னைச் சுற்றி இருப்பவர்களைச் சாய்க்கப் பயன்படுத்துகிறார்கள். அது இனத்தையே அழிக்கும். இது அரச குலத்தில் தொடர்ந்து வருவதால் இதற்காக ஒரு அதிகாரம் சமைத்திருக்கிறார் நம் பேராசான்.
சகோதரச் சண்டையால் அழிந்தவர்கள் கௌரவர்களும், பாண்டவர்களும் மட்டுமல்ல. நமது ஈழத் தமிழர்களும்தான்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments