26/04/2023 (783)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வினைத்தூய்மை இல்லை என்றால் என்ன ஆகும் என்னும் காரணங்களை அடுத்து வரும் நான்கு குறள்களில் தெரிவிக்கிறார்.
“மலைந்து” என்றால் ‘மேற்கொண்டு’ என்று பொருள். இதுதான் மாய்ந்து, மாய்ந்து செய்கிறான் என்று மருவிவிட்டதோ?
“நல்குரவு” என்றால் வறுமை, இல்லாமை என்பது பொருள் என்று நமக்குத் தெரியும்.
சரி, நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால், பழியைத் தரும் செயல்களைச் செய்து அதனால் வரும் பயன்களைவிட, துன்பத்தைத் தரும் வறுமையே மேல் என்கிறார்.
அது மட்டுமல்ல, அவ்வாறு அந்தப் பழிச் செயல்களுக்கு அஞ்சி, வறுமையை ஏற்றுக் கொள்பவர்கள் சான்றோர்கள் என்றும் எடுத்துச் சொல்கிறார்.
பழியைத் தரும் செயல்களைச் செய்பவர்கள் சான்றோர்கள் அல்லர். சான்றோர்களுக்கு எதிர்ச்சொல் சாலாதாவர்கள். அதாவது சால்பு இல்லாதவர்கள்.
நாம் குறளுக்கு வருவோம்.
“பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.” --- குறள் 657; அதிகாரம் – வினைத்தூய்மை
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் = சாலாதார் பழியினைத் தரும் தீய வினைகளை மேற்கொண்டு அதனால் வந்தச் செல்வத்தின்;
சான்றோர் கழிநல் குரவே தலை = சான்றோர் அந்தச் செயல்களைத் தவிர்த்ததனால் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
சாலாதார் பழியினைத் தரும் தீய வினைகளை மேற்கொண்டு அதனால் வந்தச் செல்வத்தின், சான்றோர் அந்தச் செயல்களைத் தவிர்த்ததனால் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
இந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கி முன்றுறை அரையனார் பெருமான் தனது பழமொழி நானூறு என்னும் நூலில் ஒரு பழமொழியை உருவாக்கியுள்ளார். அந்தப் பெருமானார், கி.பி. 301 – 400 க்கு இடையில் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.
“மோரின் முது நெய் தீதாகலோ இல்” என்பதுதான் அந்தப் பழமொழி. அதாவது, மோர் காலம் கடந்தால் பயன்படாது. புளித்துவிடும்! ஆனால், நெய்யானது காலம் கடந்தாலும் கெடாது.
“சிறியவர் எய்திய செல்வத்தின் மாண்ட
பெரியவர் நல்குரவு நன்றே – தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முது நெய் தீதாகலோ இல்.” --- பழமொழி நானூறு.
சாலாதார் கீழானச் செயல்களைச் செய்து பெற்றச் செல்வத்தின், தரம் தாழ்ந்தச் செயல்களைத் தவிர்க்கும் சான்றோர்களின் வறுமையே மேல் என்கிறார்.
இதற்கு உதாரணமாகத்தான் அந்தப் பழமொழி, “மோரின் முது நெய் தீதாகலோ இல்”.
அந்தக் காலத்தில் பெண்களை முன் நிறுத்தி, அவர்களுடன் உரையாடுவது போல், பெரும் புலவர்கள் தங்கள் பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். இதற்கு “மகடூவு முன்னிலை” என்று பெயர். அதானல்தான் “மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்!” என்கிறார்.
தமிழ் இலக்கண நூல்களில் மிகச் சிறந்த நூல்களில் ஒன்றான ‘யாப்பருங்கலக் காரிகை’ என்னும் நூல் அவ்வாறு எழுதப்பட்ட ஒன்றுதான்.
“ஆடுவு முன்னிலை” என்றால் ஆடவர்களை முன் நிறுத்தி எழுதுவது!
சும்மா தெரிந்து வைத்துக் கொள்வோம்.
வினைத்தூய்மையை மறந்துடாதீங்க!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント