30/07/2022 (519)
“நார்” என்றால் கயிறு என்பது அனைவரும் அறிந்த பொருள். கயிறு என்ன செய்யும் எதையும் சேர்த்து கட்டும், சேர்த்து வைக்கும்.
“நார்: என்பதற்கு மற்றுமொரு பொருள் “அன்பு”. அன்பும் அனைவரையும் இணைக்கும்.
பேதைமை என்று ஒரு அதிகாரம் வைத்திருக்கிறார் நம் பேராசான். 84ஆவது அதிகாரம். அதில் உள்ள சில குறள்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 13/11/2021 (263).
பேதை என்றால் யார் என்பதற்கு நம் பேராசானின் பதில்:
“பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்.” --- குறள் 831; அதிகாரம் - பேதைமை
பேதைமை என்பதுஒன்று யாது எனின்= பேதைமை என்ற ஒன்று என்னவென்றால்; ஏதம்கொண்டு ஊதியம் போக விடல் = நமக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஆர்வத்தைச் செலுத்தி, நமக்கு பயன் தருவதை கவனிக்காமல் விடுவது.
பேதைக்கு இன்னுமொரு விளக்கம் சொன்னதையும் பார்த்தோம். பேதைகள் செய்யும் ஒரு செயலின் விளைவு ஏழு தலைமுறையையே அழுத்திடுமாம் நரகத்திலே! (ஏழு பிறப்புன்னும் பல பேரறிஞர்கள் சொல்கிறார்கள்)
“ஓருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.” --- குறள் – 835; அதிகாரம் – பேதைமை
எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு = வரும் காலங்களில் எல்லாம் தன்னை துன்பத்தில் வீழ்த்தி அழுந்தும் நிலையை; ஓருமைச் செயல்ஆற்றும் பேதை= தன் ஒரு செயலிலே செய்யும் ஆற்றல் படைத்தவர்தான் பேதை; புக்கு = வீழ்த்தி, புகுந்து; அளறு = நரகம், துன்பம்
பேதைமையில் இருந்து இன்னுமொரு குறளைப் பார்த்துவிட்டு நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் ‘குடிமை’க்கு போவோம்.
அதாவது, பழிக்கு அஞ்சுவது, ‘சார்ந்தவர்க்கல்லால்’ என்று திருநாவுக்கரசப் பெருமான் சொன்னார் இல்லையா அதைப் போல நல்லவற்றை நாடாமல் இருப்பது, யாரிடமும் அன்பு பாராட்டாமை, அதாங்க ‘நாரின்மை’, மேலும் எந்த நல்ல பழக்க வழக்கங்களைப் பேணாமை இதெல்லாம் யார் செய்வார்கள் என்றால் பேதைகள்தான் செய்வாங்களாம்.
“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.” --- குறள் 833; அதிகாரம் - பேதைமை
ஒருவனுக்கு தன் குடி நலத்தின்கண் ‘நாரின்மை’ தோன்றினால் என்ன ஆகும் என்று நம் பேராசான் சொல்வதை நாளை பார்க்கலாம் என்றார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare