22/07/2022 (511)
குந்தி தேவி கர்ணனை தன் மடியில் கிடத்திக் கொண்டு அழுகிறாள். அவள் அழுவதைக் கண்டு பாண்டவர்கள் திகைக்கிறார்கள்.
போர்களத்தில் மாண்ட கர்ணனைக் கண்ட துரியோதனன், “இணை யாரும் இல்லா அரசே, என் வாழ்வே, நீ இல்லாமல் நான் யாருக்காக வாழ வேண்டும்” என்று பலவாறு கூறி கண்ணீர் வடிக்கிறான்.
தன்னைக் காக்கும் தலைவனின் கண்களில் நீர் வடிய தலைவனுக்காக தன் உயிரைத் துறப்பதை வீரர்கள் பெரிதும் விரும்புவார்கள்.
தன் நாட்டிற்காக போராடி, தன் நாட்டு மக்கள் கண்ணிர் சிந்த, உயிரைத் துறப்பது என்பது உண்மையான வீரர்கள் விரும்பும் ஒரு பேறு. அது போல் ஒரு இறப்பு வருமாயின் அதையே பெரிதும் விரும்புவார்களாம். இதற்கு பெயர்தான் படைச் செருக்கு.
அம்மாதிரியான ஒரு நிகழ்வுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவன் தான் கர்ணன்!
நம் பேராசான், 78 ஆவது அதிகாரமாக “படைச் செருக்கை” வைத்துள்ளார். அதன் முடிவுரையாக சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை:
“புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.” --- குறள் 780; அதிகாரம் - படைச்செருக்கு
புரந்தார் = தம்மை காப்பவர்கள், மூத்தோர்கள், அரசர்கள், ஆதரிப்பவர்கள்; சாக்காடு = உயிரைத்துறப்பது; இரந்துகோள் = இரந்தாயினும்
கர்ணன், தன் கடமைகளை எந்தவித பாச மயக்கத்துக்கும் ஆட்படாமல், இறுதி வரையில் தனக்கென ஒரு பற்று வைக்காமல் வாழ்ந்து,யாருக்கும் எட்டாத சிறப்பைப் பெற்றான். மகாபாரதத்தில் உயர்ந்து நிற்கும் ஒரு பாத்திரமாக கண்ணபிரானாலேயே அடையாளம் காட்டப்பட்ட ஒரே பாத்திரம் கர்ணன்.
கர்ணனின் பாத்திரப் படைப்பை அறிந்தும், புரிந்தும் கொண்டால் வினைக் கொள்கையை (concept of Karma) விளங்கிக் கொள்ளலாம். ‘தவறுகள்’, ‘பாவங்கள்’ என்று நாம் வரையறுகிறோமே அந்த எல்லைக்குள் அவனின் செயல்களில் பல இருக்கலாம். ஆனால், அவைகள் எல்லையற்ற பரம்பொருளால் மன்னிக்கப்பட்டது அல்லது ஒதுக்கப்பட்டது.
யாருக்கும் அமையா பெரும்பேற்றினைப் பெற்றான். ‘கடமையைச் செய் பலனைப் பாராதே’ என்ற கீதையின் சாரத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவன் என்பதற்கு அது ஒரு குறிப்பு.
தன் பிறப்பினால் தாழ்த்தப்பட்டு, பல அவமரியாதைகளை சந்தித்து, வெற்றி வாய்ப்புகள் பலவாறு பறிக்கப்பட்ட போதும், தளரா தன்முயற்சியால் வானளாவ உயர்ந்து நிற்கும் பாத்திரம் கர்ணன். வலிய அவன் எங்கும் வம்பிற்கு சென்றதில்லை!
தன் நிலையை, தன் செயலாலேயே உயர்த்தியவன், மாற்றியவன் கர்ணன்.
முப்பெரும் பண்புகளாகிய கொடை, விரம், நன்றியுணர்வு ஒரு சேர அமைந்தவன் கர்ணன்.
வில்லிபுத்தூர் பெருமான், கர்ணனைப் பற்றி பலவாறு எடுத்துரைக்கிறார். சமயம் வரும்போது அதைப் பற்றி சிந்திக்கலாம் என்றார் என் ஆசிரியர். மீண்டும் குறளுக்குள் வருவோம் என்றார்.
வில்லிப்புத்தூர் பெருமான் கர்ணனை ‘கன்னன்’ என்றே அழைக்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
コメント