12/06/2022 (471)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’ என்றவர் அடுத்து ‘பொருட்பொருளார்’ என்ற அடைமொழியைக் கொடுக்கின்றார் நான்காவது குறளில்.
பொருட் பொருளார் என்றால் பொருள் ஒன்றிலேயே குறியாக இருக்கும் வரைவின் மகளிர். அவர்களால் கிடைப்பது புன் நலம் என்கிறார். , அதாவது இழிந்த இன்பம் என்கிறார்.
அந்த புன்னலத்தை பலர் விரும்ப மாட்டார்களாம், அவர்கள் யார்? என்று ஒரு கேள்வியைக் கேட்டு பதில் சொல்கிறார் நம் பேராசான்.
“அருட் பொருள் ஆயும் அறிவினவர்” என்கிறார். அருட் பொருள் என்பதற்கு அருள்+பொருள் என்று பிரித்து பல அறிஞர் பெருமக்கள் உரை கண்டு இருக்கின்றார்கள். அதாவது அருளோடு வந்தப் பொருள். அது என்ன என்றால் யாரையும் வாட்டாது வருத்தாது வந்தப் பொருள். அதாவது அறத்தோடு வந்தப் பொருள். குறளைப் பார்க்கலாம்.
“பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவினவர்.” --- குறள் 914; அதிகாரம் – வரைவின் மகளிர்
அருட்பொருள் என்ற சொல்லுக்கு ‘அரும்பொருள்’ என்ற பொருளையும் எடுத்து சுவைக்கலாம். அதற்கு கீழ் காணும் குறளை எடுத்துக் கொள்ளலாம்.
“தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.” --- குறள் எண் – 462; அதிகாரம் – தெரிந்து செயல்வகை
அரும்பொருள் என்றால் அரிதான பொருள், உயர்ந்த பொருள் என்று பொருள். அதாவது தெரிந்த இனத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து செய்பவர்களுக்கு அடைய முடியாத அரிதான பொருள் ஒன்றும் இல்லை.
இந்த இரு குறள்களை இனைத்தால் வரும் பொருள்: உயர்ந்த, சிறந்த, அரிதான பொருள்களை ஆராய்ந்து அடையும் நோக்கம் கொண்டவர்கள் பொருட் பொருளாரின் புன்னலத்தில் தோய அதாவது மூழ்கிக் கிடக்க விரும்பமாட்டார்கள்.
மேலும் ‘அரும்பொருள்’ என்றால் பொதிந்து கிடக்கும் பொருள் என்றும் பொருள் உண்டு. ‘அரும்பொருள் விளக்கம்’ என்றால் ஒரு சொல்லுக்குள் பொதிந்து கிடக்கும் பொருள்களை விளக்குவது என்று பொருள். அரும்பொருள் விளக்க நிகண்டு என்ற பழம் பெரும் நூல் தமிழ்ச்சொற்களின் பொருள்வளம் காட்டும் நிகண்டுகளில் (dictionary) ஒன்று. இதனைத் தொகுத்தவர் திருச்செந்தூரில் வாழ்ந்த அருமருந்தைய தேசிகர் எனும் பெருமானாவார். பொருட்பொருளாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிபவர்கள் அவர்களிடம் இன்பம் விரும்ப மாட்டார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், அரும்பொருள் என்றால் உள்பொருள் அதாவது உண்மையான எப்போதும் நிலைத்து நிற்கும் பொருள் என்றும் பொருள். சைவ சித்தாந்தம் என்றும் உள்ள பொருள்கள் மூன்று என்கிறது. அவையாவன, பதி, பசு, பாசம். அந்த உயர்ந்த பொருட்களை ஆராயும் நோக்கினவர்களும் பொருட் பொருளார் புன்னலம் தோயார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆயும் அறிவினவர் என்றால் நல்லது எது, அல்லது எது என்று ஆராயும் அறிவினவர். அவர்கள் நாடுவரோ பொருட் பொருளாரை என்று கேட்கிறார் நம் பேராசான்.
அதாங்க நம்ம எல்லாரையும்தான் சொல்கிறார். நீங்க எல்லாம் எவ்வளவு நல்லவங்க? நீங்க அங்கே போகலாமா? என்று தட்டிக் கொடுத்து அழைத்துச் செல்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments