17/02/2021 (31)
நன்றி, நன்றி, நன்றி
அறத்தை செய்தால் பொருள் செலவாகுமா?
“நிதி மிகுந்தோர் நிதி தாரீர்;
அது சற்று குறைந்தோர், உடல் உழைப்பு நல்கீர்;
உடல் உழைப்பு தவறின், வாய்சொல் அருளீர்;
அதுவும் இன்றேல், ‘வாழ்ய நீவீர்’ என எண்ணேல்.”
என்னடா இது, தேர்தல் பரப்புரையோ? என்று எண்ணவும் கூடும். நிற்க.
ஆசிரியரை அனுகி நேற்றைய கேள்வியான, அறத்தை செய்தால் பொருள் செலவாகுமா?ன்னு கேட்டதற்கு, அவர் கூறிய சொற்றொடர்களைத் தான் மேலே நான் குறிப்பிட்டவை.
மேலும், நாம் பார்த்த 34 ஆவது குறள் கவனம் இருக்கிறதா என்றார்.
இரு நாட்களுக்கு முன்பு பார்த்தது தானே உடனே கூறிவிட்டேன்.
“மனத்துக்கண் மாசிலன்ஆதல்அனைத்துஅறன் ஆகுலநீரபிற.” --- குறள் 34; அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நன்று, நன்று. மனதிலே குற்றமில்லாமல் இருப்பதே அறத்தின் உச்சம். அது போலவே ஒருவரை வாழ்த்துவதும், அவர் உயர மனமார எண்ணுவதும் அறமே.
எந்த ஒரு வினையும் மூன்று வழிகளில், அதாவது மனதாலும், பேச்சாலும் (மொழி), செயலாலும் (மெய்), நடைபெறும். இந்த அடிப்படையில், எதுவரை இயலுமோ அதுவரை அறம் செய்க.
இதனைத் தான் நமது பெரும்புலவர் ஓளவையார் தனது ஆத்திச்சூடியிலே “அறம் செய விரும்பு” என்கிறார். அறம் செய் என்று கூட சொல்லவில்லை. முதல்ல விரும்புப்பா, மிதியெல்லாம் தானே நடக்கும்னு ஒரு சுலபமான வழியைக் காட்டுகிறார். எண்ணம் சிறப்பா இருக்கனும்ங்கிறதைப் பற்றி
“உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596 இல் பார்த்தோம். (நல்ல வேளை நான் தப்பிச்சுட்டேன். என்னை அது என்ன குறள் என்று கேட்கலை!)
அறத்தை எண்ணத்திலே இருந்து ஆரம்பிங்க. பொருள் செலவு ஒன்றும் ஆகாது. செய்ய, செய்ய பொருள் தானாக வந்து சேரும். பிறகு, எல்லாவகையிலும் செய்யலாமென்றார் என் ஆசிரியர். மேலும் அறம் செய்யலைன்னா கேடு வரும்ங்கிறார் வள்ளுவப்பெருந்தகை குறள் 32 இல்.
“அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.” - குறள் 32; அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
அறத்தினாலே உயர்வு வரும், அறம் செய்ய மறந்தா பெரும் கேடு தான்னு அடிச்சு சொல்றாரு. தம்பி, சிலர் தானும் செய்யாம பிறர் செய்வதைக் கண்டு பொறாமையும் படுவாங்க, அவர்களின் கதி என்னாகும் தெரியுமா? அதை ஒரு குறளிலே சொல்லியிருக்காரு. அதைக் கண்டு பிடி. நாளை பார்கலாம்னு சொல்லிட்டாரு. கண்டுபிடிப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்.
Comments