03/08/2023 (882)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
மனங்கள் இணைந்துவிட்டால் வேறு பொருத்தங்கள் பார்க்கத் தேவையில்லை என்பார்கள். இது திருமணங்களுக்கும் பொருந்தும்.
மனங்கள் இனையாவிட்டால் அந்த மனங்களை எதைக் கொண்டும் இணைக்கவியலாது.
சரி, அப்படியே கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோம்!
Fevikwik என்று ஒரு பசைக்கு (கோந்து) விளம்பர வரிகளாக அவர்கள் பயன்படுத்தும் வாசகம்: “Fevikwik fixes everything but a broken heart.” அதாவது, “பெவிஃகுவிக் உடைந்த இதயத்தைத் தவிர எல்லாவற்றையும் இணைக்கும்” என்பது பொருள்.
அண்மையில் (09/05/2023) வந்த ஒரு செய்தி எல்லாரையும் திகைக்க வைத்துவிட்டது. பெவிஃகுவிக் விளம்பரத்தை ரொம்பவே நம்பிட்டார் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்.
ஏழு வயது சிறுவன் ஒருவனுக்கு கீழே விழுந்ததால் ஒரு கண்ணுக்கு அருகில் அடிபட்டுவிட்டது. அடிபட்ட இடத்தில் இருந்து இரத்தம் நிற்காமல் வழிந்து கொண்டிருந்ததாம். நம்ம மருத்துவரைப் போய் பார்த்திருக்காங்க.
அவர் என்ன செய்தார் என்றால், அடிபட்ட இடத்தை இணைத்து தையல் போடாமல், பெவிஃகுவிக்கை தடவி அனுப்பிவிட்டுட்டார். அது பெரும் பிரச்சனையாக போயிட்டுது!
மனம் ஒப்பாமல் வேலை செய்து கோண்டிருப்பார் போலும்!
என்ன செய்வது? இவர்களெல்லாம் பல கற்றும் கல்லாதவர்களே! இது நிற்க.
கூடா நட்பென்பது மனம் ஒத்துப் போகாத நிலை என்கிறார் நம் பேராசான்.
“மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று.” --- குறள் 825; அதிகாரம் – கூடா நட்பு
மனத்தின் அமையாதவரை = மனத்தால் நம்முடன் ஒப்பாமல் இருப்பவர்களை; எனைத்தொன்றும் = எந்தச் செயலிலும்; சொல்லினால் = அவர்கள் சொல்லும் இனிமையான வார்த்தைகளைக் கொண்டு; தேறுதல் = தெளிதல், நம்புதல்; தேறற்பாற்றன்று = நம்பி அவர்களை எந்தச் செயலிலும் ஈடுபடுத்தல் கூடாது. நாமும் ஈடுபடவும் கூடாது.
மனத்தால் நம்முடன் ஒப்பாமல் இருப்பவர்களை அவர்கள் சொல்லும் இனிமையான வார்த்தைகளை நம்பி அவர்களை எந்தச் செயலிலும் ஈடுபடுத்தல் கூடாது. நாமும் அவர்களை நம்பி ஈடுபடுவதும் கூடாது.
சுருக்கமாக, மனம் ஒப்பாமல் இருப்பவர்களை நம்புதல் கூடாது. சரி, இதை எப்படி கண்டுபிடிப்பது?
நாம் ஒருவருடன் பழகும்போது நம் புலன்கள் கூர்மையாக இருத்தல் வேண்டும்.
எப்படி ஒரு குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளிகள் ஏதாவது சில தடயங்களை விட்டுச் செல்வார்களோ அப்படி மனம் ஒப்பாதவர்கள் சில குறிப்புகளை விட்டுச் செல்வார்கள். இவற்றை நம் உள்ளுணர்வு நமக்கு உணர்த்தும். இதைத்தான் “being aware” என்கிறார்கள். அதாவது விழித்திரு!
உங்களுக்கு இதைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் கூடிய விரைவிலேயே தெரிந்து கொள்வீர்கள்! நான் சொல்லலைங்க. நம்ம பேராசான் சொல்கிறார்.
“நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.” --- குறள் 826; அதிகாரம் – கூடா நட்பு
ஒல்லை = விரைவில்; நட்டார்போல் நல்லவை சொல்லினும் = நம் முன்னேற்றத்தில் நாட்டம் உள்ளவர்கள் போல சில நல்லவைகளைச் சொன்னாலும்; ஒட்டார்சொல் = நம்முடன் ஒட்டாதவர்களின் சொல்களின்; உணரப்படும் = உண்மையான நோக்கம் விரைவிலேயே வெளிப்பட்டுவிடும்.
நம்முடன் ஒட்டாதவர்கள் நம் முன்னேற்றத்தில் நாட்டம் உள்ளவர்கள் போல சில நல்லவைகளைச் சொன்னாலும் அந்தச் சொல்களின்உண்மையான நோக்கம் விரைவிலேயே வெளிப்பட்டுவிடும்.
“சொல்லினும்” என்றதனால் ஒட்டாதவர்கள் நமக்கு நல்லவை போன்று இருப்பதையும்கூடச் சொல்ல மாட்டார்கள் என்பது தெளிவு.
அதையும் மீறி அவர்கள் ஏதாவது சொல்வார்களானால் அதனில் கேடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும் என்பதையும் அழுத்திச் சொல்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
உங்கள் பதிவைத் தினமும் தவறாது படிக்கிறேன். திருக்குறளின் பொருளை நீங்கள் விளக்கும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. https://tamilneram.github.io/ இது எங்கள் குழு உருவாக்கிய வலை பக்கம். இதனைப் பற்றிய தங்களின் கருத்து மற்றும் அதரவு (தங்களின் நண்பர்களிடம் பகிர்தல்) தருமாறு வேண்டுகிறோம்.