13/01/2023 (680)
‘ஒளி’ என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறார் நம் பேராசான். ‘ஒளி’ பெயர்ச்சொல்லாக வரும் போது விளக்கு, சோதி, வெளிச்சம், புகழ், பெருமை, தொலை நோக்கு, எடுத்துக்காட்டு இப்படி பல பொருள்களில் பயின்று வருகிறது.
‘ஒளி’ வினைச்சொல்லாக வரும்போது மறைத்துவை என்ற பொருளில் வருகிறது. இது நிற்க.
ஒளி என்பதற்கு எல்லோருக்கும் பொதுவாக ஒரு வரையறை செய்கிறார் நம் பேராசான். அந்தக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 மீள்பார்வைக்காக:
“ஓளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல்.” --- குறள் 971; அதிகாரம் – பெருமை
ஓளி ஒருவற்கு உள்ள வெறுக்கை = ஒருவற்கு பெருமை என்பது தன் குடியை முன்னேற்றுவோம் என்ற ஊக்க மிகுதியே;
இளி ஒருவற்கு அஃது இறந்து வாழ்தும் எனல் = அவ்வாறில்லாமல்கூட வாழலாம் என்பது ஒருவற்கு இழிவானது.
ஒருவற்கு பெருமை என்பது தன் குடியை முன்னேற்றுவோம் என்ற ஊக்க மிகுதியே; குடி எக்கேடு கெட்டுப் போனா என்ன, என்று வாழ்வது இழிவானது.
தனி மனிதனுக்கு பெருமை சேர்ப்பது தன் குடியை உயர்த்துவது என்றால், தலைமைக்கு, அரசிற்கு எது ‘ஒளி’?
தலைமைக்கு நான்கு செயல்களை வரையறுக்கிறார். அவையாவன: இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுதல், அனைவரிடமும் இன்சொல் பேசி கருணையோடு இருத்தல், முறையான ஆட்சி, மக்களைக் காத்தல் இந்த நான்கையும் ஒழுகினால் அதுதான் வேந்தர்க்கு பெருமை, புகழ் என்கிறார்.
“கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையனாம் வேந்தர்க்கு ஒளி.” --- குறள் 390; அதிகாரம் - இறைமாட்சி
கொடை = இல்லாதவர்களுக்கு கொடுத்தல்; அளி = கருணை, இன்சொல்; செங்கோல் = முறையான ஆட்சி; குடி ஓம்பல் = மக்களைக் காத்தல்; நான்கும் உடையனாம் = இந்த நான்கு பண்புகளையும் ஒருங்கே பெற்றவன் வேந்தர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக் காட்டு போன்றவன். அதுதான் பெருமை, புகழ்.
இந்த நான்கு பண்புகளையும் சுருக்கி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அதைத்தான் ‘செங்கோன்மை’ என்கிறார்.
‘மன்னுதல்’ என்றால் நிலைபெறுதல், தங்குதல், வேண்டுதல் என்றெல்லாம் பொருள்படும்.
“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.” --- குறள் 556; அதிகாரம் – கொடுங்கோன்மை
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை= தலைமைக்கு நீடித்த புகழ் இருக்க வேண்டும் என்றால் செய்யவேண்டியது செங்கோன்மை;
அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி = அப்படியில்லை என்றால் அதாவது கொடுங்கோன்மையைக் கடைபிடித்தால் தலைமைக்கு புகழும் பெருமையும் வந்து சேராது.
தலைமைக்கு நீடித்த புகழ் இருக்க வேண்டும் என்றால் செய்யவேண்டியது செங்கோன்மை; அப்படியில்லை என்றால் அதாவது கொடுங்கோன்மையைக் கடைபிடித்தால் தலைமைக்கு புகழும் பெருமையும் வந்து சேராது.
புகழும், பெருமையும் மன்னுவதால்தான் ‘மன்னன்’ ஆகிறான். மன்னன் என்பது காரணப் பெயர்!
மீண்டும் சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント