20/09/2021 (209)
சிரிப்பினைத் தொடர்வோம். இன்று எப்படி சிரித்து நட்பை விரிப்பது என்பதைக் குறித்து நம் பேராசான் சொன்ன குறளினைப் பார்க்கலாம். நம் அனைவருக்குமே மிகவும் பரிச்சயமானக் குறள்.
முகம் மலர்ந்து சிரிக்க சிரிக்கப் பேசும் நட்பை நட்பு என்று சொல்லவியலாது. நெஞ்சங்கள் அன்பால் மலர சிரித்து உவக்கும் நட்பே நட்பு என்கிறார்.
“முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.” --- குறள் 786; அதிகாரம் – நட்பு (79)
முகம்நக நட்பது நட்புஅன்று = சும்மா பார்க்கும்போது மட்டும் சிரித்துப் பேசி பிரிவது நட்பின் கணக்கில் வராது; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு = உள்ளம் மகிழ, நெஞ்சங்கள் நெகிழ, உணர்வின் வெளிப்பாடாக முக மலர்ச்சியை ஏற்படுத்தும் நட்பே நட்பு.
உள்ளங்கள் இனைவதுதான் நட்பு என்கிறார்.
இந்தக் குறள் எண் 786. 786 என்பது ஒரு சிறப்பான எண். மூன்று பகா எண்களின் பெருக்கல் தொகை 786. அதாவது, 2x3x131=786. இதை ஸ்ஃபீனிக் எண்கள் (sphenic number) என்று அழைக்கிறார்கள். தேடிப்பாருங்கள்.
அரேபிய எண்கணித முறை (numerology) ஒன்று இருக்கிறது. அதிலே சில எழுத்துக்களை எழுதித்தருவார்கள். அதற்கு ‘அப்ஜத் எழுத்துக்கள்’ என்று பெயர். அந்த எழுத்துக்களை எண்களாக மாற்றி எழுதி வைக்கும் முறையும் இருக்கிறது. நமது பகுதியிலும் அப்பழக்கம் இருக்கிறது. இதை நாம் ‘யந்திரங்கள்’ (yantras) என்கிறோம்.
அப்படி எழுதிய சில அரபிய எழுத்துக்கள் எண்களாக மாறும்போது வருவதுதான் இந்த 786. இதன் பொருள்: பெருங்கருணையாளனான கடவுளின் பெயரால் (நல்லதே நடக்கட்டும்) (In the name of Allah (i.e. God) the compassionate; the merciful)
எண்ணத்தில் தோன்றியதால் எழுதுகிறேன். இது நம்பிக்கையாளர்களுக்கு மட்டும்.
அபிஜித் முகூர்த்தம் என்ற ஒன்று இருக்கிறது. இது ஒரு நாளின் எட்டாவது முகூர்த்தம். சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள பதினைந்து முகூர்த்தங்களில் சிறப்பானது என்று கூறப்படுகிறது. இந்த நேரத்திற்கு எந்த தோஷங்களும் இல்லையாம். இது பெரும்பாலும் காலை 11.45 லிருந்து 12.45 வரை இருக்கும். இதில் எந்த செயல்களும் செய்யலாம் என்கிறார்கள்.
தமிழர்கள் ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகப் பிரிக்கிறார்கள். அவையாவன: காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை. அதிலே ‘நண்பகல் நேரம்’ என்ற சிறுபொழுது, காலை 10 லிருந்து மதியம் 2 மணி வரை. நண்மையைப் பயப்பதால் அது நண்பகலோ?
‘தெய்வத்தால் ஆகாது எனினும்’ என்றும் ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றும் நம்பேராசான் சொல்லியிருப்பதை மனதில் கொள்க. நல்லதைச் செய்ய நேரம் பார்க்கத் தேவையில்லை!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments