20/03/2023 (746)
இன்பத்திற்கு, வளர்ச்சிக்கு காரணமானது முயற்சி. முயற்சியை விழைவான்; இன்பம் விழையான் என்றார் குறள் 615ல்.
முயற்சியின் பலனை விரிக்கிறார். செய்தால் என்ன பலன்? செய்யாமல் விட்டால் என்ன ஆகும்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் வரும் குறளில். இந்தக் குறள் நாம் அனைவரும் அறிந்த குறள்தான்.
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.” --- குறள் 616; அதிகாரம் – ஆள்வினை உடைமை
திருவினை = செல்வம், வளம் (resources எனும் பொருளில்);
முயற்சி திருவினை ஆக்கும் = தலைவனின் தளராத முயற்சி, வளங்களை வளர்க்கும்;
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் = முயற்சியில் தொய்வு இருந்தாலும், முயலாமல் விட்டாலும் அவனிடம் உள்ள வளங்களும் இல்லாமல் போகும்.
வளங்கள் ஆறு வகை என்கிறார்கள். அவையாவன: 1) இடித்தும், வரும் பொருளை உணர்த்தியும் சொல்லக் கூடிய சான்றோர்கள், அமைச்சர்கள்(Human Resources); 2) நாடு (Territory); 3) அரண் – பாதுகாப்பு வளையங்கள்(Safety nets); 4) பொருள்(material resources); 5) படை, கருவிகள் (Tool kits); 6) நட்பு வளையங்கள்(External friendly supports).
முயற்சி இல்லாவிட்டால் இந்த ஆறு வகை அங்கங்களிலும் குறை ஏற்படுமாம்.
ஆக, தலைவனுக்கு இரு கண்கள் போதாது. ஆறு கண்கள் தேவை!
நாம் உழவைக் குறித்து சிந்தித்தபோது ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதைக் குறித்தும் சிந்தித்தோம். காண்க 24/01/2022 (333).
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments