26/01/2021 (9)
100, 200, 300, 291, 645
அருமை, அருமை. எனதருமை தம்பி ரத்தன், என் பணியை எளிமையாக்கி, நேற்றைய முடிச்சுக்கு, உடனடியாக முயன்று அனுப்பிய குறள் தான் சொல்வன்மை என்கிற அதிகாரத்திலிருந்து 645 வது குறள். வாழ்த்துகளும், நன்றிகளும்.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து” ---குறள் 645; அதிகாரம் - சொல்வன்மை
பயன் படுத்த பழக வேண்டிய முறைமை:
1. இனிமையாக இருத்தல் வேண்டும்: - 100 வது குறள்
“இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”
2. பயன் பயத்தல் வேண்டும்: - 200 வது குறள்
“சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்.”
3. அச் சொற்களில் தீங்கு இலாத உண்மை வேண்டும்: - 300, 291 குறள்கள்
“யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.” --- 300
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.” --- 291
4. அச் சொற்களும் வெல்லும் சொற்களாக இருத்தல் வேண்டும்:- 645 வது குறள்
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து” --- 645
என்ன ஒரு அழகான அளவுகோல்கள் – பழக முயல்வோம்.
நிற்க.
“பிறிதோர்சொல்” – லில் ஒரு நுட்பம் ஒளிந்திருக்கிறது!
நாம் சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக, சிறந்த சொல்லாக இருத்தல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மறுதலிக்க முயல்பவர்களுக்கும் மாற்ற இயலாத சொல்லாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய சொல்லாக இருத்தல் வேண்டும் என்கிற நுட்பம் வெளிப்படுகிறது.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
コメント