12/09/2022 (561)
“காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்…” --- மகாகவி பாரதியார்
‘காற்று வெளியிடையில் களிப்பது’ என்றால் என்ன?
காற்று அடிக்கும் இடத்தில் இருந்து கொண்டு, அவளின் காதலை எண்ணிக் களிப்பதா?
மற்ற இடத்தில் இருந்து கொண்டு களிக்க இயலாதா, என்ன? நிச்சயம் முடியும்.
அப்போ, அந்த ‘காற்று வெளியிடை’க்கு என்ன முக்கியத்துவம்?
அதற்கு நம் பேராசான் பதில் சொல்கிறார்.
அதாவது, காதலில் வீழ்ந்த இருவர்க்கு எது இனியது என்றால் காற்று வெளியிடை இல்லாமல் கட்டித் தழுவி இன்பம் துய்ப்பது என்கிறார்.
அந்த இன்பத்தைத்தான் நம் மகாகவி ‘காற்று வெளியிடை’ என்று சொல்லி அங்கு நிகழ்ந்தது அனைத்தையும் தொடர்ந்து காட்ச்சிப் படுத்துகிறார்.
“வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.” --- குறள் 1108; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
போழ = பிளக்க; போழப்படா = பிளக்கப்படா, (காற்றாலும்) இருவரையும் பிரிக்கமுடியாத;
வளியிடை போழப்படாஅ முயக்கு = காற்றும் இடைபுகாது நெருக்கித் தழுவுதல்;
வீழும் இருவர்க்கு இனிதே = காதலில் விழ்ந்த இருவர்க்கும் இனிதே.
காற்றும் இடைபுகாது நெருக்கித் தழுவுதல், காதலில் விழ்ந்த இருவர்க்கும் இனிதே.
இப்போது, தொடக்கத்தில் உள்ள மகாகவியின் பாடலைப் படிக்கவும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments