top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

01/01/2025, பகவத்கீதை, பகுதி 138

அன்பிற்கினியவர்களுக்கு:

பகவத்கீதைக்குள் மீண்டும் நுழைவோம்.

பாடல் 13:12 இல் நிறுத்தினோம். தத்துவப் புரிதல் இருந்தால் நன்மையாக இருக்கும் என்றதனால் சைவத் தத்துவங்களை மிக மிக மேம்போக்காக 21/12/2024 அன்று தொடங்கி நேற்றுவரை பார்த்தோம்.

 

மீள்பார்வைக்காகப் பாடல் 13:12

 

எது அறியத்தக்கதோ, எதனை அறிந்தால் சாகாத் தன்மையை அடைகின்றானோ அதை மேலே கூறுவேன். பிரம்மம் எனப்படுவது ஆதியில்லாதது, உயர்ந்தது. அதற்குத் தோற்றமும் இல்லை, அஃது, இல்லாமல் போவதும் இல்லை. – 13:12

 

தொடர்கிறார் …

 

எதனின் கைகளும் கால்களும் எங்கும் பாவும் தன்மையுடையதோ, எதனின் கண்களின் பார்வையும், காதுகளின் கூர்மையும் எங்கேயும் நீளும் தன்மையுடையதோ அது இந்த உலகம் முழுவதும் பரவி நிற்கின்றது. – 13:13

 

புலன்களைச் செயல்கள் மூலம்தாம் அறியலாம் என்றாலும் புலன்கள் ஏதும் இல்லாமல் புலன்களின் கூர்மை இருக்கும்; பற்றில்லாமல் இருப்பினும் அனைத்தும் பற்றி நிற்கக் காரணமாக இருக்கும். குணமற்றதாக இருப்பினும் குணங்களைத் துய்க்கும். – 13:14

 

அது பொருள்களுக்கு உள்ளும் புறமும் உள்ளது; அசைவதாகவும் அசைவற்றதாகவும் உள்ளது; அதனின் சூக்குமத் தன்மையால் அறிய முடியாததாகவும் உள்ளது; வெகு தொலைவில் இருப்பது போலத் தோன்றினாலும் வெகு அருகிலும் உள்ளது. – 13:15

 

பிளவுபடாத அப்பொருள் ஒவ்வொரு பொருளிலும் பிளவுபட்டது போல் காட்சி அளிக்கும். பொருள்களைத் தாங்கும் அது பொருள்களையும் தன்னுள் ஒடுக்குவதும் மீண்டும் தோற்றுவிப்பதும் அதுவே என்று அறியத்தக்கது. – 13:16

 

ஒளிர்விடும் பொருள்களின் ஒளி அஃது. இருளையும் கடந்து உள் நிற்கும் ஒளி அஃது. அஃதே அறிவு (ஞானம்); அஃதே அறியத் தக்கது (ஞேயம்); அறிவினால் அடைய வேண்டிய பொருளாகவும் (ஞானகம்யம்) எல்லாருடைய உள்ளத்திலும் நிலையாக இருப்பதும் (விஷ்ட்டிதம்) அஃதே! – 13:17

 

இவ்வாறு (உயிர் தங்கியிருக்கும் க்ஷேத்திரம்) அவ்விடத்தினையும், அவ்வாறே ஞானமும், ஞேயமும் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. என்னை நேசிப்பவன் இவற்றை நன்குணர்ந்து என்னுள்ளே கலக்கிறான். – 13:18

 

பிரகிருதி (காரியப் பிரபஞ்சம்) என்னும் இவ்வுலகமும் புருஷன் என்னும் ஆன்மாவும் ஆகிய இரு தத்துவங்களும் அநாதி. அஃதாவது, தொடக்கம் இல்லாதது. வெவ்வேறான வடிவங்களும் குணக்கலவைகளும் பிரகிருதியிலிருந்து பிறந்ததாக அறிவாய். – 13:19

 

(காரியப் பிரபஞ்சம் இந்த உலகம் என்றால் காரணப் பிரபஞ்சம் மாயை)

 

காரியக் காரணத் தத்துவங்கள் மூலம் இந்தப் பிரகிருதியானது விளக்கப்படுகிறது. இன்ப துன்ப அனுபவங்களை பெறுவது எங்கனம் என்பதற்குப் புருடதத்துவம் சொல்லப்படுகிறது. – 13:20

 

(மூலப்பிரகிருதியிலிருந்து இருபத்து நான்கு தத்துவங்கள் பிறந்தன என்றார்கள் சாங்கியர்களும் சைவ சித்தாந்திகளும். மூலப் பிரகிருதி என்பது இறுதியில் ஐந்து புதங்களின் கூட்டே. அஃதாவது இயற்கையின் கலவையே.)

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




 

5 views0 comments

Recent Posts

See All

Comentarios


Post: Blog2_Post
bottom of page