அன்பிற்கினியவர்களுக்கு:
குரு துரோணரும் மாண்டுவிட்டால்?
பீஷ்மர்: ம்ம்… அப்படியும் ஒரு சந்தேகமா? கவலையை ஒழி. அப்படி நிகழ்ந்தால் உன் உயிருக்கு உயிரான நண்பன் இருக்கிறானே கர்ணன் அவனைப் போர்த் தலைவனாக்கு. எதிரில் உள்ள படைகளை ஐந்து நாள்களில் பொடிப் பொடியாக்கும் திறன் அவனிடத்தில் உண்டு.
துரி: மகிழ்ச்சி, மகிழ்ச்சி ஐயனே! நீங்கள் என்றால் ஒரு நாள், இல்லையென்றால் குரு துரோணர் மூன்று நாள், அப்படியும் இல்லையெனில் என் ஆருயிர் நண்பன் கர்ணன் ஐந்து நாள். ஆக மொத்தம் ஒன்பது நாள். வெற்றி, வெற்றி. பத்தாம் நாள் நான் அரசன். வருகிறேன் பிதாமகரே!
அவனுக்கு அதன் பின் சந்தேகமேயில்லை. அவ்வளவு நம்பிக்கை கர்ணனின் மேல்!
இந்த உரையாடலைத் திருதராஷ்ட்டிரர் கேட்டுக் கொண்டிருந்த்திருப்பார் போலும்.
பத்தாம் நாள் வெற்றிச் செய்திக்குப்பதில் பீஷ்மரின் வீழ்ச்சி பேரிடியாக வந்து வீழ்ந்தது.
அவர்களின் வெற்றிக்கு மேல் இருந்த நம்பிக்கை ஆட்டம் காண பத்தாம் நாளில் வினவுகிறார்.
சஞ்ஞயன் இதுவரை நிகழ்ந்ததைச் சொல்ல பகவத்கீதையை இங்கே அமைக்கிறார் வியாசர் பெருமான்.
சரி, நாம் பகவத்கீதையினுள் நுழைவோம்.
முதல் அத்தியாயம் அர்ஜுன விஷாத யோகம். அஃதாவது அர்ஜுனின் மனக் குழப்பத்தைச் சிந்தித்தல்.
முதல் பாடல் (சுலோகம்) திருதராஷ்ட்டிரர் ஆரம்பிக்கிறார்.
தர்ம ஷேத்ரே குருஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவஹ மாமகாஹா
பாண்டவாச்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய … 1:1
சஞ்ஞயனே குருஷேத்திரம் என்னும் தர்ம ஷேத்திரத்தில் போர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றுள்ள என் பிள்ளைகளும் பாண்டவர்க்ளும் இதுவரை என்ன செய்தார்கள்? (1:1)
மேலோட்டமாகப் பார்த்தால் ஷேத்திரம் என்பது தங்கும் இடம். அஃது ஓர் ஊர், நாடு என்பன போல் பொருள்படும்.
குரு ஷேத்திரம் என்ற நகரைப் பரத குல அரசன், குரு என்பார் நிர்மானித்தார் என்றும் அங்குதான் மகாபாரதப் போர் நிகழ்வதாக அமைந்துள்ளது.
ஆனால், ஷேத்திரம் என்பதற்கு ஆன்மா தங்கும் இடமான உடலைக் குறிக்கும் என்பது பின்னர் வரும் அத்தியாயங்களில் தெளிவாகும்.
தர்மம் என்றால் அறம்; குரு என்றால் அறியாமையை நீக்குபவர் என்று பொருள்.
அற வழியில் நிற்க வேண்டிய இந்த உடலில் (தர்ம ஷேத்ரே); அறியாமையை நீக்க வேண்டியவர் உறையவேண்டிய அந்த இடத்தில் போராட்டம் நிகழ்கின்றது. அந்தக் களத்தில் என்ன நிகழ்ந்தது, எப்படிச் செல்ல வேண்டும் என்ற அலசல்தான் அடுத்து வருவன.
இது குறித்து இரமண மகரிஷி சொல்வதாவது:
“பகவத்கீதையின் கடைசி சுலோகம் “… த்ருவா நீதிர் மதிர் மம” என்று முடிகிறது.”
"கடைசி சுலோகத்தின் கடைசி வார்த்தையையும் (மம) , முதல் சுலோகத்தின் முதல் வார்த்தையையும் (தர்ம) இணைக்கும்போது கிடைப்பது "மம தர்ம". இதன் பொருள் "உனது உண்மையான தர்மம்". இதைத்தான் கீதை போதிக்கிறது"
"உன் தர்மம் என்ன? நீ மனித வாழ்கை வாழவேண்டும் .... நீ மனிதப்பிறவிதான்: மகானுமல்ல, மிருகமும் அல்ல என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்". என்று இரமண மகரிஷி சொல்கிறார்.
உன்னைக் கண்டுபிடித்து அறிந்து விட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய் என்பது அவர் அருள் உபதேசம்.
அஃதாவது, ““உன்னையே நீ அறிவாய்”.
மகாகவி பாரதியும், மகாத்மா காந்தியும், விவேகானந்தப் பெருமானும், சாக்ரடீஸ் பெருமானும், மார்க்கஸ் அரேலியஸ் பெருமானும் மற்றும் அருளாளர்கள் பலரும் சொல்வது இதனைத்தான்.
சரி, பகவத்கீதையைத் தொடர்வோம். திருதராஷ்டிரரின் வினாவிற்கு விடையாக சஞ்ஜயன் முதல் நாளில் இருந்து சொல்லத் தொடங்குகிறார்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
என் பிள்ளைகளும் பாண்டவர்க்ளும் depicts திருதராஷ்ட்டிரர் ovelry attachment to his children ( ultimately where it would lead to ....) It would be interesting to relate this to what we do in our life... Reminded of குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்" . More than any sort of wealth உண்மையான பொருள் நமது பிள்ளைகள. அவர்களை சான்றோன் ஆக்குவது நமது கடமை.