அன்பிற்கினியவர்களுக்கு:
அடுத்துவரும் பாடல் மிகுந்த கவனத்திற்குரியது.
பொருள்களுக்கெல்லாம் காரணமாக உள்ள என்னுடைய பெருமதியை உணராமல் மூடர்கள் மனித உடல் எடுத்த என்னை அவமதிக்கிறார்கள்.- 9:11
இங்கிருந்துதான் முன் சொன்ன கருத்துகளில் இருந்து மாறுபாடு எழுகின்றது. கடுமையான வார்த்தை பயன்பாடுகளும் எழுகின்றன!
வீனாசை உடையோர்கள், வெட்டி வேலை செய்து கொண்டிருப்போர் (வீணர்கள்), சிற்றறிவுடையோர், மதியற்றோர் உள்ளிட்டவர்கள் மயங்கி உள்ளார்கள். இவர்கள் இராட்சசத் தன்மையையும் அசுரத் தன்மையுமே வெளிப்படுத்துவார்கள். – 9:12
புத்தியுள்ள மாகாத்மாக்களோ என்னை அறிந்து சிந்தித்துப் பூசிக்கின்றார்கள். – 9:13
எப்பொழுதும் என்னைத் துதிப்பவர்களாய் அதே எண்ணத்தில் நிலைத்து இருந்து என்னை வணங்குகிறார்கள். – 9:14
வேறு சிலர் தங்கள் அறிவினைக் கொண்டு வேள்விகளை இயற்றி ஒற்றுமையாக என்னை பூசிக்கிறார்கள். இன்னும் சிலர் எங்கும் முகமுடைய வீராட்ரூபியான என்னைப் பல வழியில் வழிபாடு செய்கிறார்கள். – 9:15
நானே ஓமம், நானே வேள்வி, நானே முன்னோர்களுக்கு இடப்படும் அன்னம், நானே உயிரிணங்களுக்கு உணவும் மருந்தும். மந்திரமும் நானே, நெய்யும் நானே, தீயும் நானே, ஹோம கருமமும் நானே, இவ்வுலகிற்குத் தகப்பனும் நானே, தாயும் நானே, தாங்குபவனும் நானே, பாட்டனும், கற்றுணரத் தக்கவனும், பரிசுத்தமளிப்பவனும், ஒங்காராப் பொருளும் நானே. அவ்வாறே ரிக், சாம, யஜூர் வேதங்களும் நானே … 9:16-17
போக்கிடமும் நானே, காப்பவனும் நானே, ஆள்பவனும் நானே, உங்களின் செயல்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பவனும் நானே, வாழுமிடமும், துன்பத்தைத் துடைப்பவனும் நானே. நண்பனும், பிறப்பிடமும், புகலிடமும், இருப்பிடமும், பொக்கிஷமும், அழியாத வித்தும் நானே. – 9:18
அர்ஜுனா, நானே வெயிலாய் காய்கிறேன், மழையாய் பொழிகிறேன், பொழியாமலும் தடுக்கிறேன், இறவாமையும், இறப்பும், இருப்பும் இன்மையும் நானே. – 9:19
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments