அன்பிற்கினியவர்களுக்கு:
புருடன் இந்தப் பிரகிருதியில் இருந்து கொண்டு குணங்களைத் துய்க்கிறான். குணக் கலவைகள் நல்லதும் கெட்டதுமாக பிறப்புகள் தோன்ற காரணமாகின்றன. – 13:21
காண்பவனுக்கு மேலே இருந்து கொண்டு காண்பவனாகவும், நினைப்பவனுக்கு உள்நின்று நினைப்பவனாகவும், (எல்லாவற்றையும்) தாங்குபவனாகவும், அனுபவிப்பவனாகவும் ஆளும் சக்தியாகவும் உள்ள பரமாத்மா என்னும் சக்தி இந்த உடலில் தன்னின்று வேறாக உடலில் உள்ள புருடனாக இருக்கிறான். – 13:22
(இயற்கையின் மூலக்கூறுகளால் ஆகியிருந்தாலும் அவன் வேறாகவே காட்சியளிக்கிறான்.)
அடுத்து ஒரு இரகசியத்தைச் சொல்கிறார்.
எவன் மேற்சொன்னவாறு குணக் கலவையான புருடனையும் குணங்களின் மூலமாக இருக்கும் பிரகிருதியையும் உணர்கின்றானோ அவன் எந்த நெறியில் வாழ்பவனாயினும் அவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. – 13:23
அவன் கர்மத் தளைகள் என்னும் கொடும் தளைகளை உள்ளிருந்து விலக்கத் தெரிந்தவன்! அவன் எப்பொழுதும் பிழைத்துக் கொள்வான் என்கிறார்.
கீதாச்சாரியன் தொடர்கிறார்:
சிலர் தியானத்தின் மூலம் இந்த உண்மைகளை அறிகிறார்கள்; வேறுசிலர் சாங்கிய யோகத்தாலும், இன்னும் சிலர் செயல்களைப் பற்றில்லாமல் செய்யும் கர்ம யோகத்தாலும் காண்கின்றனர். – 13:24
சிலர் பிறர் சொல்லக் கேட்டு அந்தப் பாதையினில் பயணிப்பதன் மூலம் இந்த உண்மைகளை அறிந்து கொண்டு இந்த இல்லறக் கடலைக் கடக்கின்றனர். – 13:25
அர்ஜுனா, ஒரு பொருள் எத்தன்மைத்தாயினும், அஃதாவது, அசையும் பொருளாக இருப்பினும் அசையாப் பொருளாக இருப்பினும் தோன்றிய பொருளனைத்தும் இந்த இடமும் புருடனும் இணைவதானாலே (க்ஷேத்திரமும் க்ஷேத்ரஜ்ஞனும்) நிகழ்கின்றது என்பதனை அறி. – 13:26
எல்லாப் பொருள்களிலும் சமமாக நிலை பெற்றவனும் அழியும் பொருள்களுள்ளும் அழியாப் பொருளாக இருப்பவனாகிய பரமேசுவரனை எவன் காண்கிறானோ அவனே காண்பவன். அந்தப் பார்வையினால் அவனும் அழிவிற்கு அப்பாற்பட்டவனாகிறான்; உயர்நிலை எய்துகிறான். - 13:27-28
செயல்கள் அனைத்திற்கும் பிரகிருதியே (இயற்கையினால் ஏற்படும் குணக்கலவைகள்) காரணமாக அமைகிறது என்று எவன் காண்கின்றானோ, அவன் அவனின் ஆத்மாவின் செயலற்றத் தன்மையையும் விளங்கிக் கொள்கிறான். – 13:29
எப்பொழுது பூதங்களின் பல்வேறுபட்ட குணக் கூறுகள் ஒரு கலவையாக ஒன்றுபட்டு ஒரே ஆத்மாவிடம் ஒடுங்குவதனையும் பின்னர் அவை பெருகுவதனையும் அனுபவத்தால் காண்கின்றானோ அப்பொழுது அவன் பிரம்மமாகவே மாறுகின்றான். – 13:30
அர்ஜுனா, ஆரம்பம் என்ற ஒன்று இல்லாததாலும் அதற்கென்று தனித்த குணம் இல்லாததாலும், இந்த அழிவற்ற பரமாத்மா உடலினுள் இருப்பினும் ஒன்றும் செய்வதுமில்லை, ஒன்றிலும் பற்றுவதுமில்லை. – 13:31
எவ்வாறு எங்கும் நிறைந்திருக்கும் ஆகாசம் தன்னின் தன்மையால் களங்கமடைவதில்லையோ, அவ்வாறே, ஆத்மா உடலில் எங்கும் பரவி இருப்பினும் களங்கம் அடைவதில்லை. – 13:32
அர்ஜுனா, எவ்வாறு சூரியன் இந்தப் பூமிப் பந்தினை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்துகிறானோ, அவ்வாறே இந்த உடலில் தங்கியிருக்கும் ஆத்மா (தங்கியிருக்கும் நாள்வரை) இந்த உடலினை ஒளிவிடச் செய்கிறான். – 13:33
இவ்வாறு, உடலுக்கும் (க்ஷேத்திரம்), உயிருக்கும் (க்ஷேத்ரஜ்ஞன்), இருக்கும் வேறுபாட்டினையும், இயற்கையில் (பிரகிருதி) தோன்றியவை இயற்கையிலேயே மீண்டும் ஒடுங்குவதனையும் எவர்கள் அறிகிறார்களோ அவர்கள் மன அமைதி அடைகிறார்கள். – 13:34
என்று சொல்லி இந்த க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகமென்னும் பதிமூன்றாம் அத்தியாயத்தினை நிறைவு செய்கிறார்.
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம் முற்றிற்று.
சுருக்கமாகத் தத்துவார்த்த வழியினில் புரிந்து கொள்ளுதல் பதற்றத்தைத் தவிர்க்கும். மனத்திற்கு அமைதியைக் கொடுக்கும். இல்லையென்றால் “எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நிகழ்கிறது?” என்ற வினா தொடர் வினாவாகப் புரியாமலே குழப்பும். “எல்லா நிகழ்வுகளுக்கும் நானே காரணமா?” என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.
செயல்களை நாம் செய்தாலும் விளைவுகள் அந்தச் செயல்களுக்கு ஏற்றார்ப்போல் பலன்களை உடனே விளைவிக்கும் என்றில்லை.
இந்த அறிவிற்குப் பெயர்தான் தத்துவப் பார்வை என்பது! என்று சொல்லி இந்தப் பகுதியை நிறைவு செய்கிறார் என்று நினைக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments