அன்பிற்கினியவர்களுக்கு:
துரியோதனன் குரு துரோணரை அணுகிப் பெருமானே ஆங்கே அந்தப் பாண்டவப் படையைப் பாருங்கள். திருஷ்டத்துய்மனால் அணிவகுக்கப்பட்டுள்ள படையைப் பாருங்கள்.
குரு துரோணருக்கும் திருஷ்டத்துய்மனுக்கும் தீராப் பகை. அவர் பெயரைச் சொன்னால் கோபம் அதிகம் வரும் என்று அப்பெயரைப் பயன்படுத்துகிறார் துரியோதனன்.
மேலும் தொடர்கிறார்: பெரிய பெரிய சூரர்கள், வில்லாளிகள், சண்டை செய்வதில் தேர்ந்த பீமன், அர்ஜுனன் உள்ளிட்ட பெரும் வீரர்கள், துரௌபதியின் குமாரர்கள் எல்லாரும் அணிவகுத்துள்ளார்கள்.
ஐயனே, நமது படையைக் குறித்தும் சொல்கிறேன். தாங்கள், பீஷ்மர் உள்ளிட்டவர்கள், எனக்காக உயிரைக் கொடுப்பவர்கள், போர்க்கலையில் வல்லவர்கள் அனைவரும் உள்ளோம். பீஷ்மரால் காக்கப்பட்டுவரும் நம் படை பெரும்படை. ஒப்பு நோக்கின் பாண்டவர்படை சுமாராகவே இருக்கிறது.
எனவே, நீங்கள் எல்லாரும் அவர் அவர் இடங்களில் இருந்து பிதாமகர் பீஷ்மருக்கு அரணாக இருங்கள் என்கிறார். … 1:2-11
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த பீஷ்மர் போரை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக சங்கநாதம் முழக்குகிறார்.
அதைக்கேட்டுப் பாண்டவர் படையில் இருந்து கண்ணனும், அர்ஜுனன் உள்ளிட்ட அனைவரும் தத்தம் பல்வேறு விதமான சங்குகளை ஊதி தாங்களும் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கிறார்கள். அப்பெரும் முழக்கம் துரியோதனனைச் சற்று கலங்கவே செய்கிறது. … 1:12-19
அர்ஜுனன் கண்ணபிரானிடம் கண்ணா தேரைச் செலுத்து; இரு படைகளிடையே நிறுத்து; நம்மை எதிர்க்கத் துணிந்தவர்கள் யார் என்று பார்க்கிறேன் என்கிறான்.
கண்ணனும் தேரைச் செலுத்தி எதிர் அணியில் உள்ளவர்கள் அனைவரும் தெளிவாகத் தெரியும் வகையில் பிதாமகர் பீஷ்மர், குரு துரோணர் உள்ளிட்டவர்களின் முன் சென்று நிறுத்துகிறார். … 1:20-25
அங்கே இருப்பவர்களைக் காண்கிறான் அர்ஜுனன் …
ஓஒ என் குருமார்கள், என் ஆசான்கள், தகப்பன் முறை கொண்ட பெரியோர்கள், என் மாமன்கள், என் அண்ணன் தம்பி முறையானவர்கள், என் மகன் போன்றவர்கள், எனக்குப் பேரன் போன்றவர்கள். ஐயகோ எல்லாரும் எனக்கு நெருங்கியவர்களாகத் தெரிகிறார்களே! … 1:26-27
அர்ஜுனன் மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் அலை அலையாக வருகின்றன. பந்த பாசம் சுழன்றடிக்கிறது. அவன் கண்ணபிரானைப் பார்த்து:
கிருஷ்ணா, இதென்ன கொடுமை! என்னைச் சோர்வு தாக்குகிறது. எனது வில் கையில் இருந்து நழுவுகிறது.
என் சொந்தங்களைக் கொல்ல என் மனம் துணிய மறுக்கிறது.
நான் போரின் முடிவினைக் காண்கிறேன். பலரும் அழிந்தபின் வரும் வெற்றி எதற்காக?
அது யாரைத் திருப்தி கொள்ளும்?
வெற்றியினால் வரும் அந்தச் சிறு இடத்தை யாரைக் கொண்டு ஆள்வீர்கள்? அனைவரும் மடிந்துவிட்ட பிறகு?
(அந்தப் போரின் இறுதியில் உயிர் பிழைத்தவர்கள் மிகச் சிலரே என்று மகாபாரதம் சொல்கிறது)
மதுசூதனா, அவர்கள் என்னைக் கொல்ல விரும்பினாலும் நான் அவர்களைக் கொல்லப் போவதில்லை. … 1:28-35
ஜனார்த்தனா, இவர்கள் போரினால் ஏற்படும் விளைவுகளை அறியாதவர்கள் என்றே நினைக்கிறேன்.
எந்தப் போராக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள், வன்முறைக்கு ஆட்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் அல்லவா?
நாம் இதுவரை உருவாக்கிக் கண்போல் பாதுகாக்கும் குலம் அழியும்.
(குலம் குறித்துத் திருக்குறளில் சிந்தித்ததைக் காண்க: https://foxly.link/easythirukkural_குலம்2)
பெண்கள் தங்கள் இயல்பு நிலைகளில் இருந்து மாறும் வகையினில் ஒடுக்கப்படுவர்.
ஐயனே, வரும் தலைமுறைக்கே அது அழிவல்லவா?
தலைமுறைத் தலைமுறையாகக் கட்டிக் காத்துவரும் பாரம்பரிய அறிவுக்கு (Traditional Knowledge) பெரும் இழப்பல்லவா ஏற்படும்.
இப்படிக் குல நாசம் செய்வதும், உயரிய பாரம்பரியங்களை அழிவுக்கு ஆட்படுத்துவதும் பிற்காலத்தில் இன்னல்களை விளைவிக்காதா? அதன் பின்னர் என்ன கதியை அடைவேன்? … 1:36-42
மேலும் சொல்லுவான்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்
Comments