அன்பிற்கினியவர்களுக்கு:
ஒர் நூல் என்றால் அதன் இலக்கணம் என்ன என்பதற்கு நம் தொல்காப்பியம் சொல்வது என்னவென்றால், முதலில் இருந்து முடிவுவரை சொல்லவரும் கருத்துகளில் மாறுபாடு தோன்றக்கூடாது. அடுத்துக் கருத்துகளைத் தொகுத்தும் விரித்தும் அதன் ஆழத்தையும் அகலத்தையும் காட்டும்படிச் சொல்ல வேண்டும் என்கிறார் தொல்காப்பியப் பெருமான்.
“நூலெனப்படுவது நுவலுங் காலை
முதலும் முடிவும் மாறுகோ ளன்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே.” – பாடல் 1422; பொருளதிகாரம், செய்யுளியல் (புலவர் வெற்றியழகனார் எளிய உரை)
நாம் பார்த்துவரும் பகவத்கீதையில் கருத்துகளில் முரண்பாடுகள் இந்த ஒன்பதாம் அதிகாரத்தில் தோன்றுகிறது.
இரண்டாம் அத்தியாயத்தில் பாடல்கள் 2:45, 2:46 இல் வேதங்களில் மயங்காதே என்றார். பற்றில்லாமல் செயல்களைச் செய் என்றுதான் வலியுறுத்தினார்.
ஆனால், இங்கே பாடல் 9:17 இல் ரிக், சாம, யஜூர் வேதங்களும் நானே என்கிறார். அது மட்டுமன்று! முன்பு சொன்ன கருத்துகளை மறந்து என்னையே பூசை செய்! என்று கீதாசாரியன் சொல்லியிருக்க முடியுமா? ஆகையினால் இக்கருத்துகள் இடைச் செருகலா என்ற எண்ணம் உதிக்கின்றது.
நான்கு வேதங்களில் மூன்றினை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறார்!
இவை மட்டுமன்று அத்தியாயம் ஏழினில் சொன்ன கருத்துகளுக்கும் முரணாகப் பல பாடல்கள் இந்த அத்தியாயத்தில் இடம் பெறுகின்றன.
பாடல் 9:20 இனைப் பார்ப்போம்.
மூன்று வேதங்களைக் கற்றவர்கள் (த்ரைவித்யாஹா), வேள்விகளால் என்னைப் பூசித்து, சோம பானத்தால் பாவம் தேய்ந்தவர்களாய் சுவர்க்கம் செல்லுதலை வேண்டுகின்றார்கள். அவர்களின் புண்ய பலனாயுள்ள தேவேந்திர உலகை அடைந்து அவ்வானுலகில் பிராகாசிக்கின்ற தேவர்களுக்குரிய போகங்களை அனுபவிக்கிறார்கள். – 9:20
அவர்கள் அந்த விசாலமான சுவர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் தேய்ந்ததும் மனித உலகை புகுகின்றனர். இவ்வாறு வைதீக கருமங்களைப் பின்பற்றியவர்கள் போகங்களில் ஆசை கொண்டவர்களாய் போதலையும் அருதலையும் அடைகின்றனர். – 9:21
வேறு எதனிலும் நாட்டமில்லாது, என்னயே பூசிக்கின்றவர்களை நான் தாங்குகிறேன். – 9:22
சரி, இப்பொழுது அர்ஜுனன் செய்ய வேண்டியது என்ன?
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments