அன்பிற்கினியவர்களுக்கு:
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகமென்னும் பதிமூன்றாம் அத்தியாயத்தினைத் தொடர்ந்து குணத்திரய விபாக யோகமென்னும் பதினான்காம் அத்தியாயத்தினைச் சொல்லத் தொடங்குகிறார்.
மூன்று குணங்களின் வகுப்பும் தொகுப்பும் குறித்துச் சிந்திக்கும் பகுதி இந்தக் குணத்திரய விபாக யோகமெனப்படும்.
மூன்று குணங்களைக் குறித்து வழி நெடுகும் சிந்தித்துள்ளோம்.
மறைகள் சொல்வனவெல்லாம் முக்குணங்களைப் பற்றியவை. நீ முக்குணங்களைக் கடந்தவனாய், குணக் கோளாறுகள் இல்லாதவனாய், இருள் சேர் இரு வினைகளையும் சேராமல் (நல் வினை, தீ வினை) அவற்றை வெற்றி கொண்டு உறுதியுடைய மனத்தினனாய், பொருள்களின் மேல் பற்றில்லாமலும், ஐம்பூதங்களால் பரவி நிற்கும் உள்ளத்தை அறிந்து இருப்பாயாக. – 2:45
குணங்கள், செயல்கள், அவற்றின் பிரிவுகளை அறிந்தவன் பற்றற்று இருப்பான். – 3:28
தொழில் பிரிவுகள் (வர்ணங்கள்) குணங்களாலும் செயல்களாலும் அமைகின்றன. – 4:13
நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். --- ஒளவையார் பெருந்தகை.
இடமும் காலமும் மாற குணங்கள் மாறும். குணங்கள் மாற விளைவுகள் மாறும்.
முக்குணங்களான சாத்விகம், இராசசம், தாமசம் இயற்கையே! (என்னில் இருந்து தோன்றின). உலகில் காணக் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் குணங்களின் கூட்டினால் உருவாவன என்று அறிந்து கொள். இந்தக் குணங்கள் இயற்கையில் (என்னிடமிருந்து) உருவாவன என்றாலும் அதனுள் இயற்கை (நான்) இல்லை! – 7:12
குணங்கள் பல கோடியாக இருப்பினும் அவற்றை மூன்றாகப் பகுக்கிறார்கள். அவைதாம்: சாத்விக குணம், இராசச குணம், தாமச குணம்.
முக்குணங்கள் என்பன தனித்தனியாக இயங்கும் என்றும் நினைப்பதிற்கில்லை. இந்தப் பிரிவுகள் ஒரு புரிதலுக்காக மட்டுமே. முக்குணங்கள் ஒரு கூட்டாகத்தாம் இயங்கும்! எது தூக்கலாக இருக்கிறதோ அதனின் விளைவு, பெரும்பாலும், அந்தக் குணத்தைச் சார்ந்ததாக இருக்கும்.
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி என்பார் வள்ளுவர் பெருந்தகை. காண்க https://foxly.link/easythirukkural_504.
நாம் பொருள்களில் குணங்கள் தங்கியுள்ளன என்று நினைக்கிறோம்.
ஆனால், பொருளிலே குணங்கள் அமைவதில்லையாம்! குணங்கள் சேருவதனால்தாம் பொருள்கள் உருவாகின்றன என்கிறார்கள்.
இந்த உலகில் உள்ள பேதங்கள் அனைத்தும் குண பேதங்களே. குணத்தை மாற்றினால் நம் வடிவமே மாறிவிடும்!
நாக்கால் உணரும் சுவை பல கோடியாக இருந்தாலும் அவையாவும் ஆறு சுவைகளின் கலப்பாகவே இருக்க இயலும். அதனைப் போலவே குணங்கள் எண்ணிறந்தவையாக இருப்பினும் அவையாவும் மூன்றின் கூட்டுதாம்!
இவ்வாறாகக் குணங்களைக் குறித்துச் சிந்தித்துள்ளோம்.
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் …
மனமிருந்தால் பறவை கூட்டில்
மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே
மலையை காணலாம்...
துணிந்து விட்டால் தலையில் எந்த
சுமையும் தாங்கலாம்
குணம்.. குணம்.. அது கோவில் ஆகலாம்... கவியரசு கண்ணதாசன், சுமைதாங்கி, 1962
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments