அன்பிற்கினியவர்களுக்கு:
அர்ஜுனன் செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்வியொடு முடித்திருந்தோம்.
சாதரணமாகவே ஐயங்களை எழுப்பும் அர்ஜுனன் இந்த இடத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பினால் போல் எந்தப் பதிவும் இல்லை. கீதாசாரியனே தொடர்வது போல அமைந்துள்ளது.
இந்த இடத்தினை விளக்க உரையாசிரியர் அண்ணா சுப்பிரமணியம் அவர்கள் கீழ்க்காணுமாறு குறிக்கிறார்: (காண்க: பக்கம் 192 ஸ்ரீமத் பகவத்கீதை – ‘அண்ணா’ சுப்பிரமணியன், ஸ்ரீ இராகிருஷ்ண மடம், மைலாப்பூர் வெளியீடு, V111 5 M 3 C 1 85)
“… பாய்களைச் செவ்வையாக விரித்து வைத்தவனுடைய படகைக் காற்றுத் தானே தள்ளிச் செல்வது போல், பக்தனுடைய வாழ்க்கைப் படகை பகவானுடைய கருணைக் காற்றுத் தள்ளிச் செல்கிறது.”
இதுவரைச் செய்த உபதேசங்களுக்கு மாறாக உள்ளது இந்தப் பகுதி! இதுகாறும் அவர் சொன்னது என்னவென்றால்:
“எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நீ மட்டும் உன்மட்டில் உன் கடமைகளை பற்றில்லாமல் செய்து கொண்டிரு. செயல்களைச் செய்வதுதான் மனம் அமைதியடையும் வழி” என்பதனைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.
அவரே, இப்பொழுது, நீ ஒன்றும் செய்ய வேண்டாம்! என்னை முழுமையாகச் சரணடை! பூசை செய்! அது ஒன்றே உய்விக்கும் என்பாரா?
பல உரையாசிரியர்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்படத்தான் செய்கின்றது. இருப்பினும் வலிய கடந்து செல்வது போலத்தான் உரைகள் அமைந்துள்ளன.
பல நுணுக்கங்களைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனுக்கு வராத ஐயம் எல்லாம் எனக்கு வருகிறது!
சரி, இந்த ஐயங்கள் எனக்கு மட்டும்தான் எழுகின்றனவா என்ற கேள்வி எழ அதனையும் உறுதி செய்து கொள்ளலாம் என்ற தேடலில் இறங்கினேன்.
பிறகுதான் தெரிகின்றது இந்த ஐயங்கள் பலருக்கு முன்னரே எழுந்துள்ளன.
அல்லும் பகலும் அழுதும் தொழுதும் பகவத்கீதையைப் போற்றிப் புகழ்பவர் கஜானன் ஸ்ரீபத் கைர் (Gajanan Shripat Khair) என்பார். இவர் “அசல் கீதைக்கான தேடல்” (Quest for the original Gita) என்னும் ஒரு நூலை 1957 இல் எழுதியுள்ளார்.
பகவத்கீதை நூலில் கருத்தொருமை இல்லை என்பதை நிறுவும் அவர் கருத்தொருமை ஒரு நூலுக்கு முக்கியம் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறார்.
ஆனால், அவர் இதற்கு அளிக்கும் ஆறுதல் என்னவென்றால் அந்தக் காலத்தில் இயற்றப்பட்ட இந்த நூலுக்கு இந்த இலக்கணம் பொருந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவை இல்லை என்கிறார்!
ஆனால், மீக நீண்ட நெடிய மகாபாரதக் கதையில் ஆயிரக் கணக்கான மாந்தர்கள், அவர்களுக்குள் பல்லாயிரக் கணக்கான சிக்கல்களும் உறவுகளும்! எந்தவித முரணும் இன்றி இவற்றைச் சொல்லிச் சென்ற மிகப் பெரிய கதைச் சொல்லி வியாசர் பெருமான்!
அவருக்குச் சிக்கல் இருந்திருக்கும் என்ற எண்ண இயலவில்லை!
கஜானன் ஸ்ரீபத் கைர் அவர்களின் முடிவான கருத்து என்னவென்றால் கருத்துகளுள் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருந்தாலும் அதை அதை அப்படியே புரிந்து கொள்வதுதான் நலமாக இருக்கும் என்கிறார்!
இந்தச் சாமாதனத்தையும் இவரின் ஆராய்ச்சிகளையும் அவற்றின் முடிவுகளையும் ஆன்மீக உலகில் இலயித்திருப்போர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை!
கைர் அவர்களின் நூலை நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை எனினும் அவரின் அலசல் அபாரமானது! இவர் என்ன சொல்கிறார் என்றால் பகவத்கீதையை எழுதியது ஒருவரல்ல மூவர் என்று ஆய்ந்து அவை எவை எவை என்றும் பட்டியலிடுகிறார்.
என்னால் கீதாசாரியன் உபதேசித்த அறிவின் தேடலை மறக்க முடியவில்லை!
கைர் அவர்கள் கண்டறிந்தவைகளைச் சுருக்கமாக பார்த்துவிட்டு நாம் மீண்டும் கீதைக்குள் நுழைவோம்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments