அன்பிற்கினியவர்களுக்கு:
கைர் (G S Khair) அவர்கள் முதன் முதலில் 1920 இல் பகவத்கீதையைப் படிக்கத் தொடங்கியதாகவும், அவரின் அலசல்களை முதன் முதலில் மராத்தி மொழியில் தொகுத்ததாகவும் பின்னர் ஆங்கிலத்தில் 1969 இல் விரித்து வெளியிடுவதாகவும் தமது ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையினில் தெரிவிக்கிறார்.
அவரின் ஆராய்ச்சி வெளிப்படுத்துவது என்னவென்றால்:
1. கீதையை தொகுத்தவர்கள் மூவர்;
2. அவர்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்தவர்கள்;
3. முதல் ஆசிரியரின் தாக்கம் அத்தியாயம் 1 முதல் 6 வரை உள்ள பாடல்களில் தெரிகின்றது. முதல் ஆசிரியர் கிட்டத்தட்ட 126 பாடல்கள்வரை எழுதியிருக்கலாம்;
4. முழு சரணாகதி மற்றும் முற்றும் முழுதான பக்திக் குறித்த கருத்துகள் முதல் ஆசிரியரின் கருத்தாக இல்லை;
5. செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் முதல் ஆசிரியர்;
6. அத்தியாயம் 8, 13, 15, 17-18 உள்ள பாடல்கள் இரண்டாம் ஆசிரியரால் பாடப் பெற்றதாக இருக்க வேண்டும்;
7. இவர் சற்றேறக் குறைய 119 பாடல்கள் இவருடையதாக இருக்க வேண்டும்;
8. பக்தியென்னும் கருத்தினைச் தொட்டுச் செல்கிறார்; மேலும் குண வேறுபாடுகள் இவருடைய கருத்தாக இருக்கலாம்;
9. அத்தியாயம் 7, 9-12, 16 மற்றும் எஞ்சியுள்ள பகுதிகளில் மூன்றாம் ஆசிரியரின் தாக்கம் தெரிகிறது. இவர் முழுக்க முழுக்க பக்தி என்னும் கருத்தினை வலியுறுத்துகிறார். இவரின் பாடல்களின் எண்ணிக்கை 400 இனைத் தாண்டலாம்.
இப்படி நீள்கின்றது அவரது ஆராய்ச்சி!
ஆக இறுதியாகக் கருத்தொருமை இல்லை என்பதனை நிறுவுகிறார். நமக்கும் பகவத்கீதையைப் படிக்கும் பொழுது இது தெள்ளத் தெளிவாகின்றது.
மூதறிஞர் ராஜாஜி அவர்களும் அத்தியாயம் எட்டில் உள்ள முதல் நான்கு பாடல்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்கிறார். பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்க என்கிறார். அவரின் உரைகளும் அவ்வாறே!
சின்மயானந்தா சுவாமிகள் (Swami Chinmayananda) உலகெங்கும் ஆன்மீக வேதாந்தக் கருத்துக்களையும் பகவத்கீதையையும் பரப்பியவர். அவர், குறிப்பாக இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ள பாடல்கள் 9:32-33 வரும் பொழுது சீறுகிறார்.
இந்தப் பாடல்களில் சொல்லப்படும் கருத்துகளை ஒரு தெய்வீகத் திர்க்கதரிசி திருவாய் மலர்ந்தருளியதாக இருப்பினும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.
இந்தப் புரிதல்களொடு தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments