அன்பிற்கினியவர்களுக்கு:
சாத்விகம், இராசசம், தாமசக் குணக்கூறுகளை விளக்கிக் கொண்டுவருகிறார்.
சிந்தனைச் சிதறல்கள் எழுகின்றன. அவற்றைப் பார்த்துவிட்டு மீண்டும் கீதைக்குள் நுழைவோம்.
ஒரு திரைப்படப் பாடல்:
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா …
… வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் …
… இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை … கவிப்பேரரசு வைரமுத்து; மொழி, 2007
உன் இதயத்தின் குரலைக் கவனி; எப்பொழுதும் நீ என்ன செய்யவேண்டும் என்று அது சொல்லிக் கொண்டே இருக்கும்; உன் கணவினை, வாழ்க்கை இலட்சியத்தை அடையும் வழி எது என்பது அதற்குத் தெரியும்.
அஃது எப்பொழுதும் பிரபஞ்சத்தோடே இணைந்திருக்கும். அதற்குப் பிரபஞ்சத்தின் மொழி புரியும்; அவற்றைக் கேள்; இது தெரிந்துவிட்டால் நீ தேடிக் கொண்டிருக்கும் உன் புதையலைக் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார் பாலோ கொயலோ Paulo Cohelo தம்முடைய படைப்பான (இ)ரசவாதி (Alchemist) என்னும் நாவலில்.
என் நெஞ்சுக்கு நெருக்கமான படைப்புகளுள் பாலோ கொயலோவின் (இ)ரசவாதியும் ஒன்று. ஒரு நாவலில் தத்துவங்களை எளிய முறையில் புரிய வைக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல். நேரமிருப்பின் வாசிக்கவும்.
திருவிவிலியத்தில் (Bible) உள்ள ஒரு வசனம்:
“நீங்கள் உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள். நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்.” – எரேமியா 24:13
இதயசுத்தியோடு எந்தவித முன்முடிவும் இல்லாமல் உங்கள் கனவினை நனவாக்கத் தேடும் பொழுது உங்களுக்கு வேண்டியதைக் கண்டடைவீர்கள் என்பதுதான் அந்த இரகசியம்.
“Nothing in this world can take the place of persistence. Talent will not; nothing is more common than unsuccessful men with talent. Genius will not; unrewarded genius is almost a proverb. Education will not; the world is full of educated derelicts. Persistence and determination alone are omnipotent. The slogan 'Press On!' has solved and always will solve the problems of the human race.” - John Calvin Coolidge.
"இந்த உலகில் எதுவும் விடாமுயற்சியின் இடத்தைப் பிடிக்க முடியாது. திறமையினால் முடியுமா என்றால் முடியாது; திறமைசாலிகள் தோல்விகளைச் சந்திப்பது தினம் தினம் நடக்கும் ஒரு நிகழ்வு!
விடாமுயற்சியினால் வெற்றி கண்டவர்களின் இடத்தை மேதைகளால் நிரப்ப முடியுமா என்றால் முடியாது; கவனிப்பாரற்ற மேதைகள் இந்த உலகினில் ஏராளம் என்பது கண்கூடு!
கற்றவர்களால் சாதிக்க முடியுமா என்றால் அதுவும் முழுக்கச் சாத்தியமில்லை; கைவிடப்பட்ட கற்றறிந்தவர்களால் அல்லவா இந்தப் பூமிப் பந்து நிரம்பியுள்ளது!
விடாமுயற்சியும் மனஉறுதியும் மட்டுமே சர்வ வல்லமை வாய்ந்தது. தேடிக் கொண்டே இருங்கள். இதுவே, மனித இனத்தின் பிரச்சனைகளை முன்னரும் தீர்த்து வைத்ததுள்ளது; எப்போழுதும் தீர்த்து வைக்கும்." - ஜான் கால்வின் கூலிட்ஜ்
குணங்களின் வெளிப்பாடுகள் உடலின் மொழி; அஃது உள்ளத்தின் மொழியா என்பதனைக் கண்டறிவதில்தான் வெற்றி இருக்கிறது.
தேடுங்கள்; கண்டடைவீர்கள்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments